இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகள்!!! உலக நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை !!!
- IndiaGlitz, [Saturday,April 04 2020]
உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது கொரோனா பற்றிய அச்சத்தில் உறைந்து இருக்கும்போது சில நாடுகள் மட்டும் நிம்மதி பெரூமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன. ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணக்கெடுப்பின்படி உலகத்தில் இதுவரை 18 நாடுகளில் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தற்போது பிபிசி ஊடகம் தெரிவித்து இருக்கிறது. ஐ.நா சபையின் மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 193. இவற்றில் பெரும்பாலான நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. உலகில் மிகச்சிறிய மக்கள் தொகையைக் கொண்டும், ஆள் நடமாட்டம் இல்லாத சில நாடுகளில் மட்டும் தான் தற்போது கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்கிறது.
காம்ரோஸ் (Comoros), லெசோட்டோ (Lesotho), மார்ஷல் தீவு (Marlsal Island), மைக்ரோனீசிய தீவுகள் (Micronesia Island), நவ்ரு (Nauru), வட கொரியா (North Korea), பாலவ் (Palau), சமௌவா (Samoa), பிரின்ஷிபி தீவுகள் (Principe Island), சாலமன் தீவுகள் (Solomon Island) தென் சூடான் (North sudan), டஜிகிஸ்தான் (Tajikistan), டாங்கோ (Tango), டர்க்மெனிஸ்டான் (Turkmenistan), டுவாலு (Tuvalu), ஏமன் (Yemen), வானுட்டு (Vanutu), சௌ டோம் (Sao tome) ஆகிய 18 நாடுகளில் இதுவரை எந்த கொரோனா பாதிப்பும் இல்லை. மேலும், நாடுகளின் பட்டியலில் வராத சில தீவுகளிலும் கொரோனா இன்னும் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் உலகிலேயே மிக அடர்ந்த காட்டுப்பகுதியான அமேசானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டதை முன்னமே ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தன.
மேற்கண்ட நாடுகளில் உண்மையில் கொரோனா இல்லையா? அல்லது பாதிப்பு எண்ணிக்கையை மறைக்கின்றனவா? என்ற சந்தேகம்கூட ஒருபக்கம் முன்வைக்கப்படுகிறது. அப்படி உலக நாடுகள் முழுவதும் எட்டிப்பார்க்க துடிப்பது வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதைத்தான். அங்கு கொரோனா பாதிப்பை பற்றி செய்திகள் முடி மறைக்கப்படுவதாக அமெரிக்க ஜெனரல் ஒருவர் முன்னதாகக் கருத்து தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. மேலும், உயிழிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. உலக அளவில் அதிகப் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், சீனா, ஈரான், ஐக்கிய நாடுகள் இருக்கின்றன. தற்போது ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து போன்றவையும் சேர்ந்து கொண்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இத்தாலி (14,681) முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. ஸ்பெயின் (11,744), அமெரிக்கா (7,403), பிரான்ஸ் (6,507), சீனா (3,326), ஐக்கியநாடுகள் (3,605) என்ற எண்ணிக்கையில் கடும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. மேலும், பாதிப்பு எண்ணிக்கையும் கடும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது அமெரிக்கா 3 லட்சத்தை நெருங்குகிறது. ஸ்பெயின் மற்றும் இத்தாலி தலா 1 லட்சத்தைத் தாண்டியிருக்கின்றன.