அமமுகவுக்கு குக்கர் சின்னம் உண்டா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டிடிவி தினகரன் தனது அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதை அடுத்து இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், அதே நேரத்தில் ஒரே குழுவில் உள்ள கட்சியினர்களுக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்றும், எனவே வரும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பொதுசின்னத்தை அமமுகவுக்கு வழங்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் வழங்க முடியாது என்றும், அக்கட்சி இன்றே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாலும் தனித்தனி சின்னம் மட்டுமே வரும் தேர்தலில் வழங்க முடியும் என்றும் திட்டவட்டமாக கூறியது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட் பரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதால் அமமுகவுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.