கொரோனாவால் வியட்நாமில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை!!! எதிர்கொண்ட விதம்???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பலி எண்ணிக்கைக் குறித்து உலக நாடுகள் கவலைத் தெரிவித்து வருகின்றன. பரவல் வேகமும் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த இயலாமல் பல மேற்கத்திய நாடுகள் கூட திணறிக்கொண்டிருக்கும் சமயத்தில் வியட்நாமில் பள்ளிகள் திறக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கின்றனர். இது எப்படி சாத்தியமானது எனத் தற்போது உலக நாடுகளே வியந்து பார்க்கத் தொடங்கியிருக்கிறது.
வியட்நாம் சீனாவிற்கு அருகில் உள்ள ஒருநாடு. சுமார் 1,000 கி.மீ வரை சீனாவின் எல்லையைப் பகிர்ந்துகொண்டு வருகிறது. மருத்துவக் கட்டமைப்பு வசதிகளும் மிகவும் குறைவாக உள்ள ஒரு நாடாகவும் வியட்நாம் இருக்கிறது. அந்நாட்டின் தலைநகரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் 900 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தகக்து. வளரும் நாடாக அறிவிக்கப்பட்டாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாத நாடாகவே இருந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை விட வியட்நாமின் Dong (VND) 311 அளவு குறைந்து காணப்படுகிறது. அதோடு குறைந்த பரப்பளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடாகவும் இருந்து வருகிறது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 9.7 கோடி. தொழில்நுட்ப வளர்ச்சியும் அந்நாட்டில் மிகவும் குறைவு. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைவு.
ஆனால் கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தி ஒரு உயிரைக்கூட இழக்காத நாடாக தற்போது வியட்நாம் இருந்து வருகிறது. எப்படி இதைச் சாத்தியப்படுத்தியது என்பதைத்தான் தற்போது உலகமே வியந்து பார்க்கும் விடயமாக மாறியிருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 268 ஆக பதிவாகியிருந்தாலும் கடந்த ஒரு மாதமாக புதிய பாதிப்பு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகள்
கொரோனா பரவத்தொடங்கிய செய்தி வெளியானவுடன் அதாவது ஜனவரியின் தொடக்கத்திலே வியட்நாம் சீனாவுடனான எல்லையை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டது. விமானத்தின் மூலம் முதலில் சொந்த நாட்டு மக்களை மட்டுமே அனுமதித்தது. சில தாய்லாந்து, சீனப் பயணிகளால் கடந்த ஜனவரியின் பாதிவரை 160 கொரோனா பாதிப்புகள் வியட்நாமில் பதிவாகின. இந்நிலைமை தொடருமானால் வியட்நாமை காப்பாற்றவே முடியாது எனப் பலரும் அச்சம் தெரிவித்தனர். அதையடுத்து நாட்டின் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளை அந்நாடு வீட்டிற்குச் சென்று தனிமையில் இருங்கள் என்று சொல்லாமல் அவர்களுக்காக 8000 ஆயிரம் தனி அறைகளை ஏற்படுத்திக் கொடுத்தது. பல ஹோட்டல் அறைகளை வாடகைக்கு எடுத்து அரசாங்கமே பயணிகளை தனிமைப்படுத்தி வைத்திருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
பிப்ரவரியின் தொடக்கத்தில் தன் சொந்த நாட்டு மக்களும் நாட்டிற்குள் வர அந்நாட்டு அரசு தடை விதித்தது. பாதிப்புள்ள மாவட்டங்கள் அனைத்தும் முழுமையாகத் தனிமைப் படுத்தப்பட்டன. சில மாகாணங்கள் கூட முழு ஊரடங்கில் தனிமைப் படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக வியட்நாம் அரசு செய்த மற்றோர் ஏற்பாடு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மருத்துவக் குழு, விசாரணைக் குழு என இருப்பெரும் குழுக்களை அந்நாட்டு அரசு ஏற்படுத்தியது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் கொரோனவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மருத்துவக் குழுவைப் பயன்படுத்தியது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை கண்டறிய விசாரணைக்குழு பயன்படுத்தப்பட்டது. இந்த விசாரணைக்குழு வெளிநாட்டு பயணிகள், வெளிநாட்டில் இருந்து திரும்பிய சொந்த பயணிகள், அவர்களுடன் தொடர்புடைய குடும்பம், நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள் என ஐந்து கட்ட விசாரணையை மேற்கொண்டது. உலகில் வேறு எந்த நாடுகளும் இந்த அளவிற்கு விசாணையை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரிசோதனைக்குத் தேவைப்படும் சோதனை கருவிகளை குறைந்த விலையில் அந்நாடே தயாரித்தது என்பதும் மற்றொரு சிறம்பம்.
கொரோனாவுக்கு எதிராக அந்நாடு வெளிப்படையான போரை அறிவித்தது. அதாவது வியட்நாமில் வரலாற்றில் போர் என்பது மிகவும் சுவாரசியம் கலந்து ஒரு உணர்வாகவே இருந்து வருகிறது. 1955- 1975 வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தெற்கு வியட்நாமிற்கும் வடக்கு வியட்நாமிற்கும் கடுமையான பனிப்போர் நிகழ்ந்து வந்ததும் கொரோனா எதிர்ப்பு போரில் நினைவுகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும். தெற்கு வியட்நாமிற்கு தொழில்நுட்பம், ஆயுதம், பொருளாதாரம் என அனைத்து நிலைமைகளிலும் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் உதவிசெய்து வந்தன.
வடக்கு வியட்நாமின் நிலைமை மோசமாக இருந்தது என்றாலும் ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டின. தெற்கு வியட்நாமை எதிர்க்கொள்ளும் அளவிற்கு ஆயுதமோ, பொருளாதாரமே இல்லாத நிலையில் வடக்கு வியட்நாம் போருக்கு தயாரான விதம்தான் தற்போது கொரோனா விஷயத்திலும் பயன்பட்டு இருக்கிறது. போர் நடைபெற்ற நாட்களில் தனது ஒட்டுமொத்த மக்களையும் போருக்காக ஒன்று திரட்டியிருக்கிறது அந்நாடு. மக்களின் ஒற்றுமையான கூட்டுணர்வு மூலம் கொரில்லா போர் முறையைப் பயன்படுத்தியது. ஆப்பிரிக்கா நாடுகள், இலங்கையில் கூட கொரில்லா போர் முறையைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதேபோல வடக்கு வியட்நாம் தனது அனைத்து மக்களுக்கும் போர் பயிற்சியைக் கொடுத்து மக்களின் கூட்டுணர்வின் மூலம் போரில் வெற்றிபெற்றது.
எந்த அடிப்படை ஆயுதங்களும் இல்லாமல் போரில் வெற்றிபெற்ற ஒரு ஊக்கம் (கூட்டுணர்வு) அந்த மக்களின் மன உளவியலில் இன்றைக்கும் தேங்கியிருக்கத்தான் செய்கிறது. கொரோனா பரவலின் ஆரம்பத்தில் அந்நாட்டு அரசு மக்களிடம் நேரடியாக பேசத்தொடங்கியது. கொரோனாவை பற்றிய அறிவியல் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மருத்துவர்களையும் அந்நாட்டு அரசு பயன்படுத்தியது. நேரடியான பேச்சு, விழிப்புணர்வு இரண்டு முறைகளும் மக்களை வீட்டில் அமைதியாக இருக்கும்படி செய்தது. மக்களை வீட்டில் இருக்கும்படி சொல்லிவிட்டு அரசும் அமைதியாக இருந்து விடவில்லை. உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ள வியட்நாம் 1.1 மில்லியன் தொகையை கொரோனாவுக்கு நிவாரணத் தொகையாக அறிவித்தது. இந்த நிவாரணத் தொகையை மக்களுக்கு நேரடியாகக் கொடுக்காமல் அனைத்து தொகையையும் சந்தைப் பொருட்களில் முதலீடு செய்து தேவையான உணவுப்பொருட்களை அரசாங்கம் வீட்டிற்கே நேரடியாக சென்று கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவையான நிவாரணப்பொருட்கள் வீடுத்தேடி வந்ததால் மக்கள் பெரும்பாலும் ஊரடங்கில் அமைதி காத்தனர்.
ஒரே கட்சி மட்டும் நடைமுறையில் உள்ள வியட்நாட்டில் இத்தகைய ஏற்பாடுகள் மிகவும் எளிமையாக சாத்தியமாயிற்று. இயற்கை பேரிடர் போன்ற காலங்களில் அரசாங்கம் மக்களிடம் நேரடியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளும் போதெல்லாம் மக்கள் அமைதியாக ஒத்துழைப்பு தருவது அந்நாட்டில் இயல்பான ஒரு விஷயமாகவே மாறியிருக்கிறது. கொரோனா நேரத்தில் அதிகபடியான ஊரடங்கு, வேலைவாய்ப்பின்மை போன்ற இடர்பாடுகள் நேரிட்டாலும் மக்கள் ஊரடங்கிற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்திருக்கின்றனர்.
பயணிகளை வீடுகளுக்கு செல்ல அனுமதிக்காமல் தனிமைப்படுத்தியது, அவர்களுடன் தொடர்புடையவர்களை விசாரணையில் கண்டுபிடித்தது, நிவாரணப்பொருட்களை அரசாங்கமே நேரடியாக வீட்டிற்குக் கொண்டு சேர்த்தது, கொரோனாவுக்கு எதிராக நாட்டையே முடக்கியது எனப் பல திட்டங்கள் தற்போது கொரோனாவில் இருந்து வியட்நாம் மக்களைக் காப்பாற்றியிருக்கிறது. கொரோனா விஷயத்தில் சுதந்திரம் பறிக்கப்பட்டதாக கருதப்பட்ட உணர்வுநிலை, மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை மக்கள் தெரிவித்தாலும் தற்போது அந்நாடு கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments