ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்??? புது விளக்கம்!!!
- IndiaGlitz, [Monday,September 28 2020]
ஊழர் புகார் குறித்த தகவல்கள் மொட்டை (அடையாளம் காண முடியாத நபர்) கடிதம் மூலம் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக ஊழல் புகார்களைக் குறித்து மொட்டைக் கடுதாசி போடும் வழக்கம் நம்ம ஊரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உண்டு. ஆனால் இப்படி கொடுக்கப்படும் புகார் கடிதங்கள் அனைத்தும் உண்மைத் தன்மை கொண்டதுதானா என்பதுபல நேரங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பழி வாங்கும் நடவடிக்கைக்காகக் கூட சில நேரங்களில் இப்படி ஊழல் புகார்களை மொட்டை கடிதங்கள் மூலம் அனுப்புவது வாடிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் ஊழல் புகார் கடிதங்கள் முகவரி மற்றும் தொலைத் தொடர்பு எண்கள் இல்லாமல் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் பெயர், ஊர் எதுவும் இன்றி மொட்டை கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் ஊழல் புகார்களை அடிப்படையாக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஏற்கனவே அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் மொட்டை கடிதத்தை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு சில வழக்குகள் விசாரிக்கப் படுவதாகக் கூறப்படும் நிலையில் தற்போது மீண்டும் இத்தகவலை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஊடகங்களுக்கு மத்தியில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால் மொட்டை கடிதத்தின் மூலம் வரும் புகார்களை விசாரிக்க வேண்டாம் என்றும் அப்படி விசாரிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.