நெருங்கி வரும் நிவர் புயல்; சென்னை உள்பட 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
- IndiaGlitz, [Tuesday,November 24 2020]
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்க உள்ளது. குறிப்பாக மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே நாளை மாலை புயல் கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது புயல் காரணமாகவும் அதிக மழை பெய்ய உள்ளது. நிவர் புயல் கரையை நெருங்க நெருங்க சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்றும் அதிக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்பட 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, குளச்சல் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்க கடல் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்றும் கடல் அலைகள் 3 மீட்டர் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் எனவே கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தமிழக அரசு ஏற்கனவே நிவர் புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் எடுத்துள்ளது என்பதும் நிவாரண படையினர் மற்றும் பேரிடர் படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் நிறுத்தப்படும் என்றும், கரையை கடந்த பின்பு மின்சார சாதனங்கள் சேதமாகி உள்ளதா என்பதை சோதனை செய்து அதன் பின்னரே மின்சாரம் அளிக்கப்படும் என தெரிகிறது., எனவே பொதுமக்கள் மெழுகுவர்த்தி இருப்பு வைத்து கொள்ளுதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது