தமிழகத்தில் நாளை பொது விடுமுறை!!!
- IndiaGlitz, [Tuesday,November 24 2020]
நிவர் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டுமே பணிபுரிவார்கள். புயல் கரையைக் கடக்கும் வேளையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் நாளை ஒருநாள் விடுமுறையும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நிவர் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் புறநகர் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இன்று மாலை 3.30 மணியில் இருந்து நாளை காலை 10 மணி வரை சூழலுக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 430 கி.மீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறியப் பின் அதிதீவிரப் புயலாக வீசும் எனவும் கூறப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது 120 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.