பாலாற்றில் வெள்ளப் பெருக்கு… 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!
- IndiaGlitz, [Friday,November 27 2020]
நிவர் புயல் கரையைக் கடந்தப் பின்பும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஒட்டிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் அதன் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையில் இருக்கும் 40 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாகத் தமிழக எல்லையில் நுழையும் பாலாறு சுமார் 222 கி.மீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அருகே வயலூர் கிராமப் பகுதியில் கடலில் கலக்கிறது. இந்நிலையில் பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் தற்போது திறக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதனால் பாலாற்றின் கரையோரம் இருக்கம் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து, “காவேரி பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டு உள்ளதால் பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் பள்ளிக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் சமுதாய கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தேவையான அடிப்படை வசதிகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.