நேற்று ராஜினாமா: இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்பு
- IndiaGlitz, [Thursday,July 27 2017]
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதை பார்த்தோம். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை லாலு பிரசாத் யாதவ் கேட்காததால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார் சற்று முன் மீண்டும் பீகார் மாநில முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு பீகார் கவர்னர் கேசரிநாத் திரிபாதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பாஜகவின் சுஷில்மோடி துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.
நிதிஷ்குமாருக்கு பாரதிய ஜனதாவின் எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது். மேலும் முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் மெஜாரிட்டியை இரண்டு நாட்களில் நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கெடு அளித்துள்ளார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 122 எம்.எல்.ஏக்களுக்கும் அதிகமாகவே நிதிஷ்குமாரின் ஜனதா தள் கட்சிக்கும் பாஜகவுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் சட்டசபையில் ஜனதா தள் கட்சிக்கு 71 எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு 53 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.