கைலாசாவிற்கு செல்லும் வழிமுறை இதுதானா??? நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பரமசிவனின் அம்சம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் நித்யானந்தாவை பற்றிய சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. நில அபகரிப்பு, சொத்து அபகரிப்பு இளம் வயதினரை நிர்பந்தித்து துறவறம் மேற்கொள்ள செய்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளில் தேடப்படும் குற்றவாளியாகக் இருந்துவரும் நித்யானந்தா கடந்த ஆண்டு துவக்கத்தில் தனது புதிய நாடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்டு மாதத்தில் அந்நாட்டின் புதிய நாணயம் மற்றும் ரிசர்வ் வங்கி சேவையையும் துவக்கி வைத்தார்.
இப்படியாக புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு நித்யானந்தா ஒருவித ஆர்வத்தையும் ஏற்படுத்தி விட்டார். இதனால் கைலாசா நாடு எப்படி இருக்கும்? அங்கு எப்படி செல்ல வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேட்கப்பட்டு வந்தன. இந்த கேள்விகளைத் தொடர்ந்து கைலாசா நாட்டிற்கு வர விருப்பம் உள்ளவர்களை கவரும் வகையில் புதுப்புது இணையதள வசதிகளையும் நித்யானந்தா அறிமுகப்படுத்தினார்.
அந்த இணையதளத்திற்கு சென்று கைலாசாவிற்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூட செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியைப் பார்த்த நமது ஆர்வக் கோளாறுகள் பலரும் கைலாசாவில் உணவகம் அமைப்பதற்கு விண்ணபித்தனர். இதனால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் தனி கதை. இந்நிலையில் உண்மையில் கைலாசா எனும் ஒரு நாடு இருக்கிறதா? அப்படி இருந்தால் ஏன் அந்நாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் தன் நாட்டிற்கு புது கரன்சி, ரிசர்வ் வங்கி, பாஸ்போட் போன்றவற்றை அறிமுகப்படுத்தியவர் ஏன் விசாவை பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என்பது போன்ற சந்தேகங்கள் இருந்து வந்தன.
இந்தச் சந்தேகங்களை போக்கும் வகையில் நித்யானந்தா தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கைலாசாவிற்கு செல்லும் வழிமுறையை அவரே கூறியுள்ளார். அதில் “இன்று முதல் கைலாசா விசாவுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் வர வேண்டும். அங்கிருந்து கைலாசாவிற்கு வர கைலாசாவுக்கு சொந்தமான தனியார் விமானச் சேவை உள்ளது. அதன் மூலமாக நீங்கள் அழைத்து வரப்படுவீர்கள். தயவு செய்து 3 நாட்களுக்கு மேல் கைலாசாவுக்கு விசா கோரி விண்ணப்பிக்காதீர்கள். அந்த 3 நாட்களில் ஒரு நாள் மட்டுமே தரிதனத்துக்கு அனுமதிக்கப்படும். விசா கோரி மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். கைலாசாவுக்கு வருவதென்றால் ஆஸ்திரேலியாவிற்கு வர ஒரு வார விசாவை வாங்குங்கள். ஆஸ்திரேலியா வந்த பிறகு தனியார் விமான சேவையில் நீங்கள் கைலாசாவுக்கு வரலாம். அந்த விமான சேவையின் பெயர் கருடா சேவை, ஒருவருக்கு தலா ஒரு தரிசனம் மட்டுமே வழங்கப்படும் அது 10 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம்வரை இருக்கும்.
அதற்கு மேல் தருமாறு அழுத்தம் கொடுக்காதீர்கள். இங்கு வருவதற்கு எவ்வித பொருளாதார தேவையும் இல்லை. ஆஸ்திரேலியா வரை மட்டுமே நீங்கள் சொந்த செலவில் வர வேண்டும். மற்றபடி ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு வரும் விமான செலவு கைலாசாவில் தங்குமிடம், உணவுச்செலவு எதுவும் கிடையாது. எல்லாமே இலவசம். ஒவ்வொரு நாளும் தலா 10 முதல் 20 பேர் வரை நான் பார்ப்பேன்.
மேலும் இங்கு வரும் நீங்கள் எல்லோரையும் பரமசிவனாக பார்க்க வேண்டும். பரம சிவனுக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளது போன்றவற்றை மட்டுமே இந்த முழு ஆன்மீக உலகில் நீங்கள் காண வேண்டும். அதற்காகவே இந்த ஏற்பாடு” என்று நித்தியானந்தா அந்த காணொலியில் பேசியிருக்கிறார்.
இந்த காணொலி மூலம் கைலாசாவிற்கு வரும் வழிமுறையை நித்யானந்தா தனது பக்தர்களுக்கு அறிவித்து விட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு வரச் சொல்லும் நித்யானந்தா ஆஸ்திரேலியாவின் எந்த விமான நிலையத்திற்கு வரவேண்டும் என்பதை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். மேலும் இணையத்தளம் வாயிலாக கைலாசாவிற்கு வருவதற்கான அனுமதியை பெற வேண்டும் எனக்குறிப்பிட்டு உள்ளார். அந்த இணையதள அனுமதியை விசா அல்லது நுழைவுச்சீட்டாக எடுத்துக் கொள்ளலாமா? என்பதும் விளங்கவில்லை.
அதோடு தனியார் விமான சேவை உங்களை வந்து அழைத்துச் செல்லும் எனக் கூறுகிறார். அதனால் ஆஸ்திரேலியாவிற்கு அருகிலோ அல்லது அந்நாட்டின் தீவுகளிலோதான் நித்யானந்தா தங்கி இருக்கிறாரா? என்பது போன்ற சந்தேகங்களும் தற்போது வலுத்து இருக்கிறது. இதுபோன்ற சந்தேகங்களை அவரது பக்தர்கள் விளங்கிக் கொள்வது நலம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com