தனி நாட்டின் அதிபராக நித்தியானந்தா..இந்துக்களுக்கு மட்டும் விசா..

 

தனி நாட்டின் அதிபராக நித்தியானந்தா.. இந்துக்களுக்கு மட்டும் விசா..உலக இந்துக்களின் ஒரே தலைவராக தன்னை அறிவிக்கவுள்ளார்..! நித்தியானந்தாவை குஜராத் மற்றும் கர்நாடக காவல்துறை பாலியல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் அவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடி தென்னமெரிக்காவில் உள்ள ஈக்குவடார் நாட்டிற்கு சொந்தமான ஒரு தீவில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அந்த தீவை தனி நாடக அறிவிக்க உள்ளதாகவும் அதற்கு கைலாஷா என்று பெயரிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.இப்போது kailaasa.org என்ற ஒரு வலைப்பக்கம் நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பக்கத்தில் நித்தியின் கைலாஷா தேசத்தைப் பற்றியும் அந்த நாட்டில் வழங்கப்படப்போகும் சேவைகள் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. இந்துக்களாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாட்டிற்குள் செல்லலாம்,தங்கலாம். இந்துக்களாக மாற விரும்புபவர்களுக்கும் நாட்டில் இடமும் எல்லா வசதிகளும் உண்டு. நாட்டில் அனைவருக்கும் இலவச கல்வி இலவச உணவு இலவச மருத்துவ சேவைகள் போன்றவை தொடங்கப்பட உள்ளன.இந்த நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான பதிவு விண்ணப்பம் கைலாஷா வலைப்பக்கத்திலேயே கிடைக்கின்றது.

எதற்காக இப்போது தனி நாடு என்று நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது, “கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் சிட்டி, இஸ்லாமியர்களுக்கு மெக்கா இருப்பதுபோல், இந்துக்களுக்கென்று ஒரு தலைநகரமாக தனது தீவு இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் நித்தியானந்தா. அந்தத் தீவுக்கு 'கைலாசா’ என்று பெயர் சூட்டியுள்ளார். இப்போது நித்தி மற்றும் நித்தி தரப்பினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் அனைத்திலும் 'கைலாசா’ என்ற பெயர் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். கைலாசாவை இந்து மதத்தின் தலைமையிடமாக அறிவித்து, கிறிஸ்துவர்களுக்கு போப் ஆண்டவர் போல் தன்னை இந்து மதத்தின் தலைவராக பிரகடனப்படுத்திக் கொள்ளும் மாஸ்டர் திட்டமே இப்போது நித்தியிடம் இருக்கிறது. இதற்காக நந்தி அருகில் நித்தியானந்தா அமர்ந்திருப்பதுபோல் தனிக்கொடி உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று அதிரவைக்கிறார்கள்.