என் உயிருக்கு ஆபத்து.. நித்தியானந்தா சிஷ்யைகள் வீடியோ வெளியீடு.

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

என் உயிருக்கு ஆபத்து என நித்தியானந்தாவின் சிஷ்யைகள் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நித்தியானந்தா செயலாளர் ஜனார்தன் ஷர்மா தனது மகள்கள் மற்றும் மகனை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் முதல் அவர்களை மீட்க சர்மா மேற்கொண்ட நடவடிக்கைகளால் நவம்பர் 3ம் தேதி அவரது 3வது மகளும் மகனும் மீட்கப்பட்டனர்

மூத்த மகள் லோபமுத்ரா என்ற தத்துவப்ரியானந்தா மற்றும் 2வது மகள் நந்திதா என்ற நித்ய நந்திதா ஆகிய 2 பேரும் இந்தியாவில் இல்லை என்று ஆசிரமத்தின் சார்பில் கூறப்பட்டது.இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளில் நித்யானந்தா தங்கியிருப்பதாகவும், அவருடன் இந்த 2 இளம்பெண்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் தினசரி தங்கள் பேஸ்புக் பக்கங்களில் தனியாகவும் சேர்ந்தும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். மகள்களை ஆஜர்படுத்த வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்த மனுவிற்கு, மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டில் இருந்து இருவரும் கடைசியாக பதில் மனு அளித்தனர். உயர்நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்துவிட்டு, எந்த நாட்டில் உள்ளனரோ அந்த நாட்டில் உள்ள இந்தியத் துாதரகத்தில் ஜனவரி 16ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கிடையே கடந்த டிசம்பர் 5ம் தேதிக்குப் பிறகு தத்துவப்ரியாவும் நித்யநந்திதாவும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் எவ்வித வீடியோவும் வெளியிடவில்லை. அதேநேரம், நித்யானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் நடத்தும் லைவ் சத்சங்கத்தில் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான், தனது உயிருக்கு ஆபத்து என்றும், அடுத்த வீடியோ வெளியிடுவதற்குள் தான் உயிரோடு இருப்பேனோ இல்லையோ எனத் தெரியவில்லை என்றும் தத்துவப்ரியா பேசுவதுபோன்ற வீடியோ வெளியானது.

இந்த வீடியோவைப் பார்த்த பின்னர் தான் என்ன செய்வது? யாரிடம் போய் முறையிடுவது எனத் தெரியவில்லை என்று கூறியுள்ள ஜனார்த்தன சர்மா, இதுகுறித்து அகமதாபாத், விவேகானந்த நகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தத்துவப்பிரியானந்தா வெளியிட்ட புதிய வீடியோவில் உயிருக்கு அச்சுறுத்தல் என தாம் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட வீடியோ என்றும் தனக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

நான் நித்யானந்தா ஆசிரமத்தை விட்டு வெளியேற விரும்புவதாகவும், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. அது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எடுத்த வீடியோ என்பதை சொல்ல விரும்புகிறேன். தனியார் சானல் வெளியிட்ட செய்திக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் நான் அளித்த பதில், ஜனவரி 10ம் தேதிக்குள் நித்யானந்தாவின் இருப்பிடத்தை தெரிவிக்கும்படி கர்நாடக மாநில போலீசாருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதிக்குள் இந்தியத் துாதரகத்தில் ஆஜராக வேண்டும் என சர்மாவின் இரு மகள்களுக்கும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது அடுத்த இருவாரங்களில் தெரிந்து விடும்.