பயமுருத்தும் சமுதாய சீர் கேடுகளை கையில் எடுக்கும் இயக்குனர்கள் பெரும்பாலும் சமூகத்தின் பார்வையிலேயே சம்பவங்களை அனுகுவது வழக்கம். புதுமுக இயக்குனர் மைகேல் அருன், பெண் குழந்தைகளுக்கு ஏர்படும் பாலியல் பலாத்காரத்தின் நிரந்தர வலியை மட்டும் காட்டாமல் காயங்களுக்கு நம்பிக்கை கலந்த அன்பே மருந்து என்கிற செய்தியை சொன்னதர்காகவே ஒரு பெரிய பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்.
அஜய் மற்றும் அபினயாவுக்கு எட்டு வயது மகள் சாதன்யா. ஓரு நாள் பள்ளிக்கு செல்லும் சிறுமியை ஒரு காம கொடூரன் கற்பழித்து குற்றுயிரும் குலையுயிருமாய் விட்டு செல்கிறான். அந்த மீளமுடியாத துயர சம்பவம் எப்படி குழந்தை,மற்றும் பெற்றோரை பாதிக்கிறது, சமுதாயம் சட்டம் மற்றும் ஊடகங்கள் எப்படி இதை அனுகுகிறாற்கள், அந்த மனித மிருகம் என்னவானது என்பதே மீதி திரைக்கதை.
முழு படத்தையும் தாங்கி நிற்பது பேபி சாதன்யா. சொல்ல முடியாத வலியையும் வேதனையும் புரிந்து கொண்டு உடலாலும் மனதாலும் நொறுங்கி போயிருக்கும் ஒரு குழந்தயை கண் முன் நிறுத்தி பார்பவர் அனைவரின் மனதிலும் உயர்ந்து நிற்கிறார். அஜய்க்கு நடிக்க வரவில்லை என்பதே ஒரு பெரிய ப்ளஸ் ஏனென்றால் ஒரு சராசரி அப்பாவாக அதிகம் செயற்கை தனம் இல்லாமல் பாத்திரத்துக்கு பொருந்து விடுகிறார். அபினயா நடிப்பில் தான் அதிகம் செயற்கை தனம் தெரிகிறது, அவர் பாத்திர படைப்பும் அவ்வளவு ஆளம் இல்லை. செய்த கொடுங்குற்றத்துக்கு சற்றும் வருந்தாத அந்த காம கொடூரனாக வரும் நடிகர் கச்சித நடிப்பு. ஓரு நிஜ கர்னாடக போலீஸ்காரராகவே மாறி மின்னுகிறார் கிஷோர். இதர நடிகர்கள் அனைவருமே சுமார் ரகம்.
கொடூரத்தை அனுபவித்து விட்டு குழந்தை பெற்றோருக்கு பதில் போலீஸை கூப்பிட்டதற்கு காரணம் இருவருமே எப்போதும் பிஸியாகவே இருப்பீர்கள் என்று சொல்லும் போது தியேட்டரில் தன்னிலை உணர்ந்தே அதிகம் பேர் கை தட்டு கிறார்கள். குணமாகி வரும் குழந்தை மீண்டும் பள்ளிக்கு செல்லும் வழியில் சம்பவ இடத்தை கடக்கும் போது பயத்துடன் திரும்பி பார்க்க மூண்று சிறுவர்கள் கைகோர்தபடி அவள் பாதுகாப்பிற்காக வருவதை பார்த்து நிம்மதியடையும் சில நொடிகள் பக்கத்து தியேட்டரில் மக்கள் சூப்பர்ஸ்டார்களின் அத்தனை பன்ச் வசனங்களைவிட அதிக மாஸ். குழந்தைக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் காயங்களை சற்று அதிகமாகவே பதை பதைக்கும் வகையில் காட்டியிருப்பது நல்லதே. மனித மிருகங்கள் இதை பார்த்தால் ஒரு வேளை மனம் மாறகூடும்.
கண்களை உறுத்தும் பல குறைகள் இருக்கின்றன ஆனால் நம்முடைய பல பிஞ்சு மலர்கள் கசக்கி அழிக்கபடும் இந்த காலத்துக்கு மிக மிக அவசியமான இந்த படத்தில் அவைகளை கண்டு கொள்ளாமல் விடுவது தப்பேதும் இல்லை. பலருக்கு தெரிந்தது போல் ஹோப் என்ற கொரிய மொழி படத்தின் அப்பட்டமான் நகலாக இந்த படம் எடுக்கப்பட்ட போதும் அதில் இருக்கும் உணர்வுகள் அப்படியே நமது கலாச்சாரத்துக்கு தகுந்த படி தந்திருப்பதால் அதையும் மன்னிக்கலாம்.
புது முகம் ஷான் ஜசீல் இசை படத்திற்கு பெரும் பலம். நா. முத்துகுமாரின் வரிகளில் பாடல்கள் அத்தனையுமே கதைக்கு உயிரூட்டுகின்றன. ஓளிப்பதிவாளர் எஸ் ஜே ஸ்டார் அபாரம், படத்தின் எல்லா ஓட்டைகளையும் ஒற்றை ஆளாக அடைத்திருக்கிறார். படதொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் மற்றும் இதர டெக்னீஷியன்கள் அனைவரின் பங்களிப்பும் முதல் தரம். இப்போது வரும் பல படங்கள் ஏதோ ஒரு உலக சினிமாவின் தழுவல் என்று சொல்ல படுகிறது. ஆனால் ஒரு நல்ல விஷயத்துக்காக காப்பி அடித்தாலும் முக்கியமான கவனத்தை ஈர்த்ததில் இயக்குனர் மைகேல் அருன் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல அறிமுகமே என்பதில் சந்தேகமில்லை.
இறுதி காட்சியில் தந்தையின் அரவனைப்பை மீண்டும் ஏற்றுகொண்டு அவரின் கழுத்தை கட்டி பிடித்தபடி செல்லும் சாதன்யாவுக்கும் குற்றவாளியை ஜீப்பில் ஏற்றிவிட்டு நிற்கும் கிஷோருக்கும் இடையே கண்களாலேயே ஒரு உரையாடல் நிகழும்போது, நிசப்த்தத்தின் முழு உயிரோட்டமும் புரிந்து கொண்டு பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டுகிறார்கள் அதுவே படக்குழுவினர்க்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
இளைஞர்களும் குறிப்பாக சிறுவர் சிறுமிகளின் பெற்றோர்கள் வலித்தாலும் தாங்கிகொண்டு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
Comments