கமல்ஹாசன் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன்
- IndiaGlitz, [Wednesday,November 08 2017]
கடந்த ஆண்டு இதே நாள் மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் அறிவித்த இந்த அறிவிப்புக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக கோலிவுட் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ஆனால் சமீபத்தில் கமல்ஹாசன், தான் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டதாக கூறி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் இன்றைய நாளை தேசிய கருப்புப்பண ஒழிப்பு நாளாக பாஜக கொண்டாடி வரும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது செய்தியாளர் ஒருவர் 'கமல்ஹாசன் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டது குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்; பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசு திட்டங்களிலுருந்து போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் ஜனநாயத்தில் அரசியலுக்கு வர யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு, எனவே கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்' என்று தெரிவித்தார்.