நிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்டு வந்த கருப்பசாமி சரண்
- IndiaGlitz, [Wednesday,April 25 2018]
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணையில் உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் மற்றும் கவர்னர் நியமனம் செய்த சந்தானம் கமிஷன் ஆகியோர் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரிடமும் விசாரணை செய்ய போலீசார் முயன்றபோது இருவரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் நேற்று பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் மாணவர் கருப்பசாமியும் சரண் அடைந்தார்.
மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்த கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளனர். முருகன், கருப்பசாமி ஆகியோர்களிடம் விசாரணை செய்தால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மேலும் பலர் குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.