நிர்மலாதேவியை நான் நேரில் கூட பார்த்ததில்லை: கவர்னர் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி அந்த கல்லூரில் படித்து வரும் நான்கு மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒருசில அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் நிலையில் கவர்னர் திடீரென விசாரணை கமிஷன் அமைத்தது ஏன்? என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்ற குரலும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். ஆளுனருக்கான வழிகாட்டி புத்தகத்தை முதலில் செய்தியாளர்களிடம் காண்பித்த கவர்னர், அதன்படி தான் பணிபுரிந்து வருவதாக கூறினார். மேலும் நிர்மலாதேவி என்பவர் யாரென்றே தனக்கு தெரியாது என்றும் அவரை நேரில் நான் பார்த்ததே இல்லை என்றும் கூறினார். இந்த வழக்கில் காவல்துறை தங்களது பணியை செய்யட்டும் என்றும் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தான் கமிஷன் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை சந்தானம் தலைமையிலான கமிஷன் முழுமையாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் என்றும் அந்த அறிக்கை வந்தவுடன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments