நிர்மலாதேவியும், ரகசிய பங்களாவும்: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Monday,April 23 2018]
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிர்மலாதேவி விவகாரத்தில் தோண்ட தோண்ட புதியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த வழக்கை ஒருபுறம் கவர்னர் நியமனம் செய்த சந்தானம் கமிஷனும், இன்னொரு புறம் சிபிசிஐடி போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர். நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் செய்த விசாரணையில் தன்னுடைய பணத்தேவையை பூர்த்தி செய்யவும், அதிகார மட்டத்தில் இருக்கும் பெரிய மனிதர்களின் நட்பும் கிடைத்ததால் இந்த காரியத்தை செய்ததாகவும், நிர்மலாதேவி கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் நிர்மலாதேவிக்கு இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் உதவியாக இருந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் முருகனிடம் விசாரணை தொடங்கிவிட்டதாகவும் அவரிடம் இருந்தும் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் விவிஐபிக்கள் தங்குவதற்காக சொகுசு பங்களா ஒன்று இருப்பதாகவும், இந்த பங்களாவில் தங்கும் விவிஐபிக்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்வது நிர்மலாதேவிதான் என்றும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பங்களாவில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தால் இந்த பங்களாவில் தங்கியது யார் யார்? என்பது தெரிய வரும். ஆனால் இந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை அழிக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றுவார்களா? பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகள் பிடிபடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்