நிர்பயா  வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒடுகின்ற பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இறந்த மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. இந்தத் தூக்குத் தண்டனையானது வருகிற 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின்பு நான்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்களை அனப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதால் சிறை துறை நிர்வாகம் அதற்கான எற்பாடுகளை செய்து வந்தது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் முகேஷ் குமார் சிங் தனது கருணை மனு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. எனவே தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை பிறப்பிக்க வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார்.

கருணை மனுவானது நிலுவையில் இருக்கும் போது தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என வழக்கை விசாரித்த நீதிபதி கூறிய நிலையில் சிறைத் துறை அதிகாரிகள் வருகின்ற 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தனர்.

தற்போது முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவினை ஆளுநர் நிராகரித்து விட்டார். அதோடு அந்தக் கருணை மனுவினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நிராகரிக்கவும் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மத்திய உள் துறை அமைச்சகமும் முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவினை நிராகரிக்குமாறு பரிந்துரை செய்திருந்தது. இறுதியாக குடியரசுத் தலைவரும் முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவினை நிராகரித்துவிட்டார்.

தற்போது திகார் சிறைத் துறை நிர்வாகம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவு அளிக்குமாறு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு கூறி வாரண்ட் பிறப்பித்துள்ளது. குடியரசு தலைவர் ஒரு கருணை மனுவினை நிராகரித்த பின்பு 14 நாட்கள் கழித்துத்தான் அந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால் தூக்குத் தண்டனையானது ஜனவரி 22 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இனிமேல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என சிறைத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.