என் மகளைக் கொன்றவர்கள் 7 ஆண்டுகளாக உயிரோடு இருக்கின்றனர்.. டெல்லி நிர்பயா தாயார் தெலுங்கானா என்கவுன்டரை வரவேற்று பேச்சு.

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொலை நடந்த இடத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, அவர்கள் காவலர்களிடமிருந்து தப்ப முயன்றபோது என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் என்கவுன்டர் நடவடிக்கையை பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரையில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், போலீஸாரின் நடவடிக்கை குறித்துப் பேசியுள்ள பெண் மருத்துவரின் தந்தை, ''என் மகள் இறந்து ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. குற்றவாளிகள் நான்கு பேரையும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதால் என் மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும். என்கவுன்டர் நடத்திய காவல்துறையினருக்கும் தெலங்கானா அரசுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.கைது செய்யப்பட்டவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டிருந்தாலும் இனி என் மகள் திரும்பி வரமாட்டார், ஆனால், தற்போது அவர்களுக்கு நடந்த இந்தச் சம்பவம் நாட்டில் இதேபோன்று குற்றம் செய்ய நினைக்கும் பலருக்கும் பெரும் எச்சரிக்கையாக இருக்கும். என் மகள் அனுபவித்த கொடுமைகளைக் கேட்டு என் மனம் வெடித்தது. ஒரு வாரமாக எனக்குத் தூக்கம் வரவில்லை.எனக்கும் மனைவி, இளைய மகள் என மூவருக்குமே உடல்நிலை சரியில்லை. நேற்றுதான் நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்தோம். எங்கள் வேதனையைக் கூற வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் என்கவுன்டர் செய்தி எங்களுக்குச் சற்று ஆறுதலாக உள்ளது. எங்களுக்காக, என் மகளுக்காக போராடிய மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

கடந்த 7 வருடங்களாக என் மகளின் மரணத்துக்கு நீதிகேட்டு அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்றுவருகிறோம். கீழ்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்ற அனைத்து இடங்களுக்கும் சென்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனக் கேட்கிறோம்.ஆனால், அது மனித உரிமை மீறலாக இருக்கும் எனக் கூறி நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்க மறுக்கிறது. ஆனால், இந்தக் காலத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணம் மட்டுமே சிறந்த தண்டனை. என்கவுன்டரால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.ஏனெனில் என் மகளைக் கொன்றவர்கள் 7 வருடங்களாக உயிருடன் உள்ளனர். நாங்கள் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தெலங்கானா பெண்ணுடைய பெற்றோருக்கு எங்கள் நிலை ஏற்படவில்லை. இனி அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்” எனக் கண்ணீர்மல்கப் பேசியுள்ளார்.