அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடலில் சிக்கித் தவிக்கும் 10 கப்பல்கள்!!! நிலைமை என்ன???
- IndiaGlitz, [Wednesday,April 01 2020]
கொரோனா பரவலைத் தடுக்க அமெரிக்கா கடந்த மாதத்திலேயே கப்பல் நிறுத்தத்துக்கு அனுமதி மறுத்து விட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் 10 கப்பல்கள் அனுமதி கிடைக்காமல் கடலில் சிக்கி தவித்து வருகின்றன. கொரோனா அச்சத்தால் உலக நாடுகள் அனைத்தும் அவர்களது எல்லைக்குள் மற்ற நாடுகளில் கப்பல்களை வரவேற்க தயங்குகின்றன. இந்நிலையில் அமெரிக்க கடற்கரை பகுதிகளில் 10 கப்பல் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.
அங்குள்ள கப்பல்களில் அதிக கவனம் ஈர்த்து வருவது கார்னிவலுக்கு சொந்தமான எம்.எஸ். சாண்டம் கப்பல்தான். இது 15 நாட்களாக கடலிலேயே தனித்து விடப்பட்டு இருக்கிறது. இந்தக் கப்பலில் இதுவரை 4 பயணிகள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கியூபா, மெக்ஸிகோ, பெரு உள்ளிட்ட பல துறைமுகங்கள் இந்த கப்பலுக்கு துறைமுகத்தை மறுத்து இருக்கின்றன. ஃப்ளோரிடாவும் இந்தக் கப்பலை ஏற்க மறுத்த நிலையில் இந்தக் கப்பலின் நிலைமை என்ன என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
Crusie Tracker மூலம் இதுவரை கடலில் 10 கப்பல்கள் 8000 பயணிகளுடன் பயணித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. MS Rotterdam, Coral Princess, MS Arcadia, Cunard Line's Queen, Mary 2 ஆகிய 5 கப்பல்கள் எந்த துறைமுகத்தில் தரையிறக்குவது எனத் தெரியாமல் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றன. The Queen Mary கப்பல் 264 பயணிகளுடன் மீண்டும் Southampath பகுதிக்கு திருப்பி விடப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 2 க்ருஸ் கப்பல்கள், தென் அமெரிக்காவில் இருந்து வட அமெரிக்கா சென்று கொண்டிருந்த நிலையில் ஃப்ளோரிடா துறைமுகம் அனுமதி மறுத்தது. இந்தக் கப்பலில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்ட நிலையில் துறைமுகங்கள் அந்தக் கப்பலை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. ஃப்ளோரிடா மாநில ஆளநர் ரான் டிசான்டிஸ் இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர்கள் ஃப்ளோரிடாவிற்கு வந்தால் படுக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் நிலைமை ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சான்டாம் கப்பலில் மேலும் 100 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் நிலையில் அதன் பணியாளர்கள் தற்போது கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்தக் கப்பல்கள் நீண்டநேரம் கடலில் இருந்தால் மேலும் மோசமான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் கூறப்படுகிறது.