Nimir Review
மலையாளத்தில் ஹிட் அடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தை பழம்பெரும் இயக்குனர் பிரியதர்ஷன், உதயநிதி ஸ்டாலினை வைத்து தமிழ் படுத்த முயற்சி செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் இந்த கிராமத்து இயல்பு கதை எந்தளவுக்கு ரசிகனை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
செல்வம் என்கிற உதயநிதி ஸ்டாலின் ஒரு போட்டோ ஸ்டூடியோ நடத்தும் ஒரு சாதாரண கிராமத்து இளைஞர்தா. யில்லாத அவர் தன் தந்தை மஹேந்திரனுடன் இயல்பு வாழ்க்கை வாழ்வதோடு தன் பள்ளி தோழி பார்வதி நாயரை காதலிக்கவும் செய்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பன் கருணாகரன் நடு ரோட்டில் போடும் சண்டையை தடுக்க போக முரடன் சமுத்திரக்கனியால் கடுமையாக தாக்க படுகிறார். அடி வாங்கிய அவமானத்தால் அங்கு கூடியிருக்கும் ஊர்க்காரர்கள் முன்னிலையில் சமுத்திரக்கனியை திருப்பி அடித்த பிறகு தான் செருப்பு போடுவேன் என்று சபதம் ஏற்கிறார். இதற்கிடையில் தன் காதலுக்கும் பங்கம் வர உதயநிதி சபதத்தை நிறைவேற்றினாரா இல்லையா அவர் காதல் என்ன ஆனது என்பதே மீதி கதை.
பாஹத் பாசில் மலையாளத்தில் அபாரமாக நடித்த கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்ய முற்பட்டிருக்கிறார். அந்த அப்பாவி கதாபாத்திரத்துக்கு அவர் முகம் நன்றாக பொருந்துகிறது. தன்னுடைய புகைப்பட ஞானம் எவ்வளவு என்பதை புது காதலி மூலமும் அப்பா மூலமும் தெரிந்து கொண்டு மாறும் அந்த இடம் பாராட்டுக்குரியது . படத்தில் மிக அற்புதமான நடிப்பை தந்திருப்பது இயக்குனர் மகேந்திரன் மற்றும் எம்எஸ் பாஸ்கர். அதிகம் வசனம் இல்லாமலே தன்னுடைய புகைப்பட ஞானம் தவிர மற்ற எல்லாவற்றிலும் பிடிப்பில்லாமல் வாழும் ஒரு வயோதிகரை அப்படியே கண் முன் நிறுத்துகிறார் மஹேந்திரன். அபாரம். எம் எஸ் பாஸ்கர் தன் நண்பரின் மகன் உதயுடன் நட்பாக பழக போய் அவர் காதலுக்காக ஹார்ட் அட்டாக் நாடகம் போட அவருக்கு ஊர் மக்கள் கொடுக்கும் ட்ரீட்மெண்ட் அரங்கையே அதிர செய்யும் அளவுக்கு சிரிப்பு வெடியில் மூழ்குகிறது. மறுபுறம் உணர்ச்சி மிகுந்த நடிப்பிலும் அசத்துகிறார் எம் எஸ் பி. அறிமுக கதாநாயகி நமீதா பிரமோத் இடைவேளைக்கு பிறகே வருகிறார். துள்ளலான நடிப்பால் கவர்கிறார். பத்திரிகை அட்டையில் தன் போட்டோ வர வேண்டும் என்று உதய் ஸ்டுடியோவுக்கு அவர் வர அங்கு நடக்கும் கலாட்டாவிலாகட்டும், ரஜினி விஜய் அஜித் பாடல்களுக்கு நடு ரோட்டில் போடும் குத்து டான்ஸிலாகட்டும் நமீதா இளசுகளின் ஓட்டுக்களை வாங்குவது நிச்சயம். ஒரு பணத்தாசை பிடித்த காரக்டரில் பார்வதி நாயர் குறையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். தான் எழுதிய எதார்த்த வசனங்களில் கவர்ந்த அளவுக்கு அந்த ரவுடி காரக்டரில் சமுத்திரக்கனி அவ்வளவாக கவர வில்லை. கருணாகரன் அருள் தாஸ் மற்றும் இமான் அண்ணாச்சியும் அவர்களுக்கு கொடுத்த பாத்திரங்களில் கச்சிதமாக செய்து கலகலப்பு ஏற்றுகிறார்கள். இதர கதாபாத்திரங்களில் வரும் அணைத்து நடிகர்களும் நல்ல தேர்வு.
முதல் பாதியில் மெதுவாகவும் இயல்பாக நகரும் கதை நம்மை ஈர்க்கிறது. அருள்தாஸ் இமான் அண்ணாச்சியால் ஒரு அவமானமடைய அவர் கோபத்தில் சென்று அது கஞ்சா கருப்பை பாதித்து பின் அது எம் எஸ் பாஸ்கரை தொற்றி அதுவே கருணாகரனை ஒரு சந்தைக்குள் கொண்டு சென்று ஹீரோவையும் கதையின் மைய புள்ளிக்கு கொண்டு செல்லும் திரைக்கதை யுக்தி சபாஷ் போடா வைக்கிறது. கொஞ்சம் புத்தி ஸ்வாதீனம் அற்றவர் போல் உலவும் மகேந்திரன் தன் மகனுக்கு புகை பட கலையின் ஆழத்தை சொல்லிக்கொடுக்கும் இடம் கவிதை. எதார்த்த காமடி பல இடங்களில் சிரிக்க வைக்கிறது உதாரணத்திற்கு ஹீரோவுடன் குங் பூ படிக்கும் அந்த ஒல்லி ஆள் சமுத்திரக்கனியின் அடியாட்களை பந்து ஆடுவதும் பார்வதி நாயரின் மாப்பிள்ளை ஹீரோவை அடிக்கடி பார்த்து முறைப்பதும் கடைசியில் அதற்கான காரணம் தெரிய வரும்போதும் ரசிக்க வைக்கிறது.
படத்தில் தமிழ் மண் வாசனை சுத்தமாக இல்லாமல் போனது பெரிய மைனஸ் அதே போல் மலையாளத்தில் ஹீரோவுக்கு அவர் போடும் செருப்பு எவ்வளவு முக்கியமானது என்பது ஆணித்தரமாக சொல்லப்பட்டதால் அவர் சபதம் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. ஆனால் இதில் ஆரம்ப காட்சி ஒரு கவர்ச்சி பாடலாக வருவதால் அந்த முக்கியமான பதிவு இல்லாமல் ஹீரோவின் சபதம் மனசுக்கு ஓட்ட வில்லை. இடைவேளைக்கு பிறகு திரைக்கதை நொண்டி அடித்து படுத்துவிடுகிறது. இறுதியில் வரும் உதய் சமுத்திரக்கனி சண்டையிலும் பெரிய சுவாரஸ்யமில்லை அந்த மழை எபெக்ட்ட்டும் நெருடலாக தெரிகிறது.
தர்புக்கா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருந்தாலும் இனிமையாக இருக்கிறது என்பதால் கேட்கமுடிகிறது. ரோனி ராபீலின் பின்னணி இசை படத்துக்கு பலம். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் அழகான காட்சிகள் விரிகின்றன அய்யப்பன் நாயரின் எடிட்டிங்கும் சீராக காட்சிகளை நகர்த்துகிறது. இந்தியாவின் முக்கியமான இயக்குனர் பிரியதர்ஷன் மஹேந்திரனுக்கும் உதய்க்குமான அந்த மெல்லிய உறவை சொல்லும் இடங்களில் தெரிகிறார் சில காட்சிகள் அவர் இயக்கத்தில் எடுக்க பட்டனவா என்கிற சந்தேகத்தையும் எழுப்புவதை மறுக்க முடியாது. மொத்தத்தில் அவர் கைவண்ணத்தில் நிமிருக்கு கம்பீரம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
ஆரவாரம் இல்லாத ஆபாசமற்ற நகைச்சுவையுடன் கூடிய இந்த எதார்த்த கிராமத்து கதையை தாராளமாக பார்க்கலாம்
- Read in English