இரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்!!!
- IndiaGlitz, [Saturday,November 28 2020]
சுவீடன் நாட்டில் ஒரு தக்காளி பண்ணையின் உரிமையாளர் தன்னுடைய பண்ணையில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார். இதனால் அந்த நகரம் முழுவதுமே இரவு நேரத்தில் வானம் ஊதா கலருக்கு மாறி இருக்கிறது. இரவு நேரத்தில் எப்போதும் இருட்டாக இருக்கும் வானம் திடீரென்று ஊதா கலருக்கு மாறியதால் அந்நகர மக்கள் கடும் பீதி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
ட்ரேலிபோர்க் எனும் நகரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்து இருக்கும் கிஸ்லோ எனும் பகுதியில் ஒருவர் தக்காளி பண்ணை வைத்திருக்கிறார். அந்தப் பண்ணையில் மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு பெரிய எல்.ஈ.டி அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பு அளவில் பெரிதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆற்றல் மிக்க அந்த லைட்டிங் அமைப்புகள் இரவு நேரத்தில் இருட்டாக இருக்கும் வானத்தை தனது ஒளிச்சிதறல் மூலமாக ஊதா கலருக்கு மாற்றி விடுகிறது.
ஆரம்பத்தில் இதை உணராத அந்த நகரத்து மக்கள் கடும் பீதி அடைந்து போலீஸ் உதவியை நாடிய சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. இந்த லைட்டினிங் அமைப்பு ஒட்டுமொத்த நகரத்தையும் வியாபித்து தினம் தோறும் வானத்தை ஊதா கலருக்கு மாற்றி விடுகிறது. குழந்தைகள் இதை ரசித்தாலும் சிலர் பயந்து கொண்டு அலறுவதால் அதிகாலை 5-11 மணி வரை லைட்டினிங் அமைப்பு நிறுத்தி வைப்பதாக பண்ணை உரிமையாளர் உத்தரவாதம் கொடுத்து உள்ளார். எதிர்காலத்தில் இந்த குறைபாடு சரிசெய்யப்பட்டு ஒட்டுமொத்த பண்ணையிலும் மின்சாரம் சேமித்து வைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.