வடிவேலுவை அடுத்து தமிழ் மீம்களில் அதிகமாக வலம்வரும் நைஜீரிய சிறுவன்!!! ரகசியங்கள் புதைந்த வெற்றிக்கதை!!!
- IndiaGlitz, [Monday,July 06 2020]
இனம் கடந்து, மொழி கடந்து உலக மக்கள் அனைவரையும் தனது உடல் மொழியால் ரசிக்க வைக்கும் ஒரு சிறந்த கலைஞராக, சிறந்த காமெடியனாக தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் சிறுவன் ஒசிட்டா ஐஹீம். இவருக்குள் இன்னொரு முக்கியமான ரகசியமும் ஒளிந்து கொண்டு இருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு பத்து வயது சிறுவன் போல காட்சி தரும் இவருடைய உண்மையான வயது 36 என்பதும் குறிப்பிடத்தக்கது. உடல் வளர்ச்சி குறைபாட்டால் தனது சிறிய வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த இவர் தனது குறைபாட்டையே தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு ஒரு சிறந்த கலைஞராகத் தன்னை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்.
ஒருவர் சிறந்த நடிகராக இருந்தாலும் மொழி தெரிந்தால் மட்டுமே பொதுவாக அவருடைய நடிப்பை உணர முடியும். ஆனால் மொழியின் துணையே இல்லாமல் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவராலும் ஒசிட்டாவின் உணர்வுகளை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய திறமைக் கொண்டவர் ஒசிட்டா. இவர் பிறந்தது 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 இல். நைஜீரியாவில் உள்ள இம்மோ மாநிலத்தில் உள்ள மப்பாய் டோலி என்ற மாகாணத்தில் ஹெப்ரம் ஐஹீம் மற்றும் அகஸ்டின் ஐஹீம் க்கு 5 பிள்ளைகளுள் ஒருவராக பிறந்தார். வளர்ந்தது எல்லாம் அபியா மாகாணத்தில். நடிப்பின் மீது கொணட் தீராத காதலால் ஊடகத்துறையில் பட்டத்தை பெற வேண்டும் என விரும்புகிறார். எனவே லாகோஸ் மாகாணத்திற்கு இடம்பெயர்ந்து படிப்பை நிறைவு செய்கிறார்.
சினிமாவில் தனக்கான வாய்ப்பை தேடிக்கொண்டே இருக்கிறார். முதலில் அவருக்கு கிடைத்தது சிறுவனுக்கான வேடம். ஒரு 18 வயது சிறுவன் குழந்தைத் தனமான சிறுவன் வேடத்தில் நடிக்க வேண்டும். அதையும் மிக அழகாக ஒக்குவானா உஹா படத்தில் செய்து காட்டினார். படம் 2003 ஆம் ஆண்டு வெளியாகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த படம் அதிலும் ஒசிட்டாவுக்கு சிறுவன் வேடம்தான். இவர் நடித்த அஹாஹம் என்ற படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களிலும் தனது வளர்ச்சியை மறைத்துக் கொண்டு ஒரு சிறுவனாக மாறி நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தது ஒரே ஆண்டில் 18 படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது. கூடவே இன்னொரு மேஜிக்கும் இவருடைய வாழ்க்கையில் நடக்கிறது. இவரைப் போலவே உடல் வளர்ச்சிக் குன்றிய சினேடு ஐஹீட்டு என்ற இளைஞர் இவருடன் வந்து சேருகிறார். இருவரும் இணைந்து அகினா உக்குவா என்ற படத்தில் நடிக்கின்றனர்.
அகினா உக்குவா படத்தில் நடித்த ஒசிட்டாவின் காட்சிகள் உலகப் பிரபலமானவை. அந்தப் படத்தில் ஒசிட்டாவின் கதாபத்திரத்திற்கு பெயர் பாவ் பாவ். பெயர் தெரியாத உலக ரசிகர்கள் பெரும்பாலும் ஒசிட்டாவை பாவ் பாவ் என்றே அழைக்கின்றனர். தற்போது மீம்களில் அதிகம் காட்டப்படும் காட்சிகளும் படங்களும் அகினா உக்குவாவில் அவர் நடித்தவைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒசிட்டாவும் சினேடுவும் இணைந்து உலக காமெடியன்களையே விழுங்கிவிடும் அளவிற்கு சிறப்பான நடிப்பை அதில் வெளிப்படுத்தியும் இருந்தனர். இந்தக் கூட்டுக் கலவை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட பின்பு Youtube களிலும் தலைக் காட்ட ஆரம்பித்தனர். இப்படி ஆரம்பித்ததுதான் மீம்களின் பட்டாளம்.
தற்போது நோலிவுட் எனப்படும் நைஜீரிய திரைத் துறையில் அசைக்க முடியாத நடிகராக மாறிவிட்டார் ஒசிட்டா. சிறுவன், காமெடியன் என இரணடு தளங்களை தாண்டி குணச்சித்திர வேடங்களும் அவருக்கு கொடுக்கப் படுகிறது. அதிலும் இறங்கி கலக்கியிருக்கிறார். உருவம் காரணமாக சிறுவனாக மட்டுமே நடிக்க முடியும் என்பதைத் தாண்டி எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் என்னால் எதையும் நடிக்க முடியும் என நிரூபித்து காட்டி இருக்கிறார் ஒசிட்டா. இவருடைய நடிப்பிற்கு கிடைத்தது ஆப்பிரிக்காவின் ஆஸ்கர் விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது. ஒரு நடிகன் தன்னுடைய 25 வயதில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வாங்குகிறார் என்றால் அது வெறுமனே அதிஷ்டத்தால் கிடைத்து விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கேலியும் கிண்டலும் சூழ்ந்த அவருடைய வாழ்வில் தன்னம்பிக்கை, அயராது உழைப்பு, எதையும் திறமையாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து அவரை ஒரு சிறந்த கலைஞராக உருவாக்கி இருக்கிறது.
இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அவருடைய சொந்த மாநிலமான இம்மாவில் ஒரு சொகுசு வீட்டையும் இவர் கட்டியுள்ளார். அந்த வீட்டின் மொத்த மதிப்பு 100 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடு, கார், சொத்து, முதலீடு எதைப் பற்றியும் அவர் ஒருபோதும் பெருமையாகக் கூறிக் கொள்வதில்லை. இதற்கு மாறாக நான் எப்போது ஒரு நடிகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. என்னைப் போன்று இளம் வயதில் கஷ்டத்தை அனுபவிக்கும் இளைஞர்களின் திறமையை வெளியே கொண்டு வரவேண்டும். உலகம் முழுவதும் அவமதிக்கப் படும் கறுப்பினத்தவரின் வாழ்க்கை மேம்பட வேண்டும். இப்படி பல கனவுகளுக்கான அடித்தளத்தையும் அவர் ஏற்படுத்தி யிருக்கிறார். Inspired members movement என்ற அமைப்பை ஆரம்பித்து அதன்மூலம் ஆப்பிரிக்காவின் பல்வேறு வளர்ச்சி பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
மாற்றங்களை இளம் பருவத்தில் இருந்தே கொண்டு வர வேண்டும் என் கருத்துடையவர் ஒசிட்டா. தன்னுடைய வாழ்க்கையின் திருப்பத்திற்கு பெரிதும் பயன்பட்டது வாசிப்பு மட்டுமே என்பதையும் பல இடங்களில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். திம்கா இக்வேயின் என்ற பிரபல எழுத்தாளருடைய எழுத்துக்கள் மீது தீராத காதலையும் கொண்டிருக்கிறார் ஒசிட்டா. இந்த வழிமுறையை மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ஒரு புத்தகத்தை அவரே எழுத முடிவு எடுக்கிறார். எனவே இரண்டு வருடங்கள் உழைத்து Inspiration one not one என்ற புத்தகத்தையும் உருவாக்குகிறார்.
இதைத்தவிர சினேடுவுடன் இணைந்து அகினா உக்குவாவில் ஹிட் அடித்த பாவ் பாவ் பெயரில் ஒரு அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, வாசிப்பு, வினாடி வினா, போட்டிகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இது நைஜீரியா முழுவதும் விரிவு படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் இவர் வெளிப்படுத்தி வருகிறார். காமெடியன், நடிகன், அந்தஸ்து என்ற தளத்தில் இயங்கிவிட்டு நகர்ந்து செல்லும் பல கலைஞர்களுக்கு மத்தியில் வளர்ச்சி குறைபாட்டால் இன்னல்களை அனுபவித்து சாதித்துக் காட்டியிருக்கும் ஒசிட்டா இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
உலகம் முழுவதும் ஒசிட்டா ஐஹீமுக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் ரசிகர்கள் இவருக்கு நைஜீரியன் வடிவேலு என்ற பட்டப் பெயரையும் வைத்து இருக்கின்றனர். காரணம் அந்த அளவிற்கு நம்மூர் ரசிகர்கள் மீம்ஸ் காட்சிகளில் ஒசிட்டாவின் நடிப்பையே எடுத்துக் காட்டி வருகின்றனர். சிறுவன் என நினைத்து ரசித்து விட்டு செல்லும் ஒரு கதாபாத்திரத்திற்கு பின்னால் இப்படியும் ஒரு ரகசியம், தன்னம்பிக்கை, உழைப்பு மறைந்து இருக்கத்தான் செய்கிறது.