நடிகார் அர்ஜுனின் 150ஆவது படம் ‘நிபுணன்’. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய இயக்குனர் அருண் வைத்தியநாதன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். டீசர். ட்ரைலர் எல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தன. படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் காண்போம்.
ரஞ்சித் காளிதாஸ் (அர்ஜுன்) சிபிசிஐடி பிரிவின் புத்திசாலித்தனமும், துணிச்சலும் திறமையும் நிறைந்த உயரதிகாரி. வீட்டில் தனது மனைவி (ஷ்ருதி ஹரிஹரன்), மகள் மற்றும் தம்பி (வைபவ்) மீது அன்பு செலுத்தும் குடும்பத் தலைவர்ன். அவரது உதவியாளர்களாக இருக்கும் அதிகாரிகள் ஜோசஃப் (பிரசன்னா) மற்றும் வந்தனா (வரலட்சுமி சரத்குமார்) அவர் மீது மரியாதையும் அன்பும்கொண்டிருப்பதால் அவரது குடும்ப உறுப்பினர்களாகவே பழகுகின்றனர். வேலையிலும் ரஞ்சித்துக்கு தக்க துணையாக இருக்கின்றனர்.
ஒரு நாள் திடீரென்று ஒரு பெட்டியில் ஒரு சிவப்பு உடை அணிந்த பொம்மை ஆட்டின் முகத்தைப் போன்ற முகமூடி அணிவிக்கப்பட்டு ரஞ்சித்துக்கு அனுப்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் சிவானந்த் (போஸ்டர் நந்தகுமார்) கொல்லப்பட்டு தூக்குக் கயிறில் தொங்கவிடப்படுகிறார். அதேபோல் மேலும் இருவர் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு கொலையிலும் அடுத்த கொலைக்கான துப்புக்களை வேண்டுமென்றே விட்டுச் செல்கிறான் கொலைகாரன்.
ஒரு கட்டத்தில் கொலைகாரனின் அடுத்த இலக்கு தான்தான் என்பதைத் தெரிந்துகொள்கிறார் ரஞ்சித். அதே நேரத்தில் அவரது உடலின் வலப்புறம் அடிக்கடி செயல்படாமல் போகும் அரிய நோய்க்கு ஆளாகிறார்.
கொலையாளி யார்? கொலைகளுக்கான நோக்கம் என்ன? ரஞ்சித்துக்கும் அவரது குடும்பத்துக்கும் என்ன ஆனது? இந்தக் கேள்விகெளுக்கெல்லாம் விடையளிக்கிறது மீதிக் கதை.
தொடர்கொலைகள் அதைச் சுற்றிய மர்மம் ஆகியவற்றை உள்ளடக்கிய த்ரில்லர் படத்தை பெருமளவில் சுவாரஸ்யமாகவும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் வைத்தியநாதன். எழுத்தாளர் ஆனந்த் ராகவ் உடன் இணைந்து அவர் அமைத்திருக்கும் திரைக்கதை கொலைகாரன் தொடர்பான மர்மத்தை இறுதிக் காட்சி வரை நீடிக்க வைத்திருப்பதால் படம் அதன் நோக்கத்தில் பெருமளவில் வெற்றிபெறுகிறது.
அர்ஜுனைப் பல படங்களில் போலீஸாகப் பார்த்திருந்தாலும் இதில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் முற்றிலும் வித்தியாசமானது. ஒரே படத்தில் வயது மற்றும் அனுபவத்தின் முதிர்ச்சியையும் ஒரு இளைஞரின் வேகம் மற்றும் துடிப்பையும் வெளிப்படுத்த வேண்டிய பாத்திரத்தை ஆழமாக உள்வாங்கி சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன். அந்த வகையில் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் அவரது 150ஆவது படம் மறக்க முடியாத ஒன்றாக அமையக்கூடும்.
ஜோசஃப் மற்றும் வந்தனாவின் கதாபாத்திரங்களும் ரசிக்கத்தக்க அம்சங்களுடன் எழுதப்பட்டுள்ளன. வந்தனா புத்தக அறிவைப் பெற்றவள் என்றால் ஜோசஃப் நடைமுறை அறிவை நம்புபவன். இருவருமே திறமைவாய்ந்த அதிகாரிகள்தான். இருவருக்குள்ளும் அன்பும் நட்பும் உண்டு ஆனால் ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் படத்தின் மென்மையான தருணங்களை ரசிக்கத்தக்கவையாக மாற்றுகின்றன. பிரசன்னா, வரலட்சுமி இருவருமே தங்களது பாத்திரங்களுக்குள் கச்சிதமாகப் பொருந்தி குறையற்ற நடிப்பையும் தந்திருக்கிறார்கள்.
அர்ஜுனின் குடும்பக் காட்சிகளுக்கு கொஞ்சம் அளவுக்கதிகமாக இடம் கொடுக்கப்பட்டு சில நேரங்களில் சற்று பொறுமையை சோதிக்கின்றன. ஆனாலும் அர்ஜுன் மற்றும் ஸ்ருதி ஹரிஹரனின் இடையேயான பொருத்தம் அவர்களுக்கிடையிலான காதல் தருணங்களை அழகாக்குகின்றன . அழகான உயர்நடுத்தரவர்க்க குடும்பத்தலைவி வேடத்துக்கு ஸ்ருதி சிறப்பான தேர்வு.
திறமையும் புத்திக்கூர்மையும் நிறைந்த அதிகாரியாக நாயகனைக் காண்பித்துவிட்டு, அவர் நிகழும் கொலைகளுக்கு இடையிலான ஒரு முக்கியமான தொடர்பை மிகத் தாமதமாகவே கண்டுபிடிப்பது நம்பத்தகுந்ததாக இல்லை. கொலையாளி யார் என்பதிலும் கொலைக்கான நோக்கத்தில் அதிர்ச்சிகரமாகவோ ஆச்சரியம் அளிக்கும் விதமாகவோ ஒன்றும் இல்லை.கொலையாளி வேண்டுமென்றே தான் செய்யும் கொலைகளுக்கான துப்புகளை விட்டுச் செல்வதற்கு வலுவான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. படத்தின் முடிவு ஒரு வழக்கமான சூப்பர் ஹீரோ படத்தைப் போல் உள்ளது.
எஸ்.நவீனின் பின்னணி இசை கொலை மற்றும் விசாரணைக் காட்சிகளில் பரபரப்பைக் கூட்ட உதவுகிறது. பாடல்கள் பரவாயில்லை.. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கொலைகளின் கோரத்தன்மையும் விசாரணையின் மர்மத்தையும் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன.
மொத்தத்தில் ‘நிபுணன்’ கொலைகள் தொடர்பான மர்மத்தை பெருமளவில் நீடிக்க வைத்து கவனத்தை திசைதிருப்பாத திரைக்கதை, புத்திசாலித்தனமான கதாபாத்திரங்கள் மற்றும் அர்ஜுனின் நடிப்புக்காக இந்தப் படத்தை நிச்சயமாகப் பார்க்கலாம்.
Comments