இந்தியாவில் பதுங்கிய இருந்த அல்கொய்தா தீவிரவாதிகள்… NIA வின் பரபரப்பான கைது பின்னணி!!!
- IndiaGlitz, [Saturday,September 19 2020]
தேசியப் புலனாய்வு அமைப்பினர் இன்று அதிகாலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திடீர் ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ரெய்டில் இதுவரை 9 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேற்கு வங்காளத்தின் முர்ஷீதாபாத் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய இரு இடங்களிலும் இதுவரை 9 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலையும் NIA வெளியிட்டு இருக்கிறது.
அவர்களிடம் இருந்து கை துப்பாக்கிகள், புல்லட் ப்ரூப் உடை, வீட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் வெடிகுண்டு போன்ற சதி வேலைகளில் ஈடுபட இருந்ததாகவும் NIA தனது விசாரணையில் தெரிவித்து இருக்கிறது. இந்த தகவலை அடுத்து இந்தியா முழுவதும் தற்போது கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்கொய்தா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வருவதாகக் கருதப்படுகிறது. அங்கிருந்து கொண்டு இவர்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலான இந்தியாவில் இருக்கும் இளைஞர்களை தொடர்பு கொண்டு இந்தியாவிற்கு எதிரான சதி வேலைகளை செய்யத் தூண்டியதாகவும் தற்போது நடைபெற்ற விசாரணை மூலம் தேசியப் புலனாய்வு அமைப்பினர் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளனர்.
மேலும் இவர்கள் தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய இடங்களில் சதி வேலைகளை செய்வதற்கு தூண்டப்பட்டு இருக்கலாம் என்று NIA தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் இதுவரை கைது செய்யப் பட்டவர்களைக் குறித்து விவரத்தையும் NIA தெரிவித்து இருக்கிறது. அதில் கேரளாவைச் சேர்ந்த முர்ஷத் ஹாசன், ஐயாகுப் பிஸ்வா மற்றும் மொசராஃப் ஹொசென், அதேபோல மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நஜ்மஸ் சாகிப், அபு சுபியன், மைனுல் மொண்டல், லியு யின் அகமது, அல்மாமுன் கமல் மற்றும் அதிதுர் ரெஹ்மான் ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தாலும் ஒருவொருக்கொருவர் தொடர்பில் இருந்தனர் என்றும் கொரோனா காலத்தில் மேற்கு வங்காளத்தில் இருந்து சிலர் கேரளாவிற்கு தொழிலாளர்கள் போர்வையில் சென்றதாகவும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பேட்டரி, சுவிட்ச், கம்பி போன்ற பொருட்களை வாங்கிக் குவித்ததால் மட்டுமே இவர்களை கண்டுபிடிக்க முடிந்தது என்றும் NIA அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அதிகளவு பட்டாசுகளை வாங்கி குவித்து இருக்கின்றனர் என்று தகவல் கூறும் NIA, பட்டாசுகளில் இருக்கும் பொட்டாசியம் குளோரேட்டை வைத்து அவர்கள் வெடிகுண்டு தயாரித்து இருக்கலாம் என்றும் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.