விஷவாயு விவகாரம்: ரூ.50 கோடி செலுத்த எல்ஜி நிறுவனத்திற்கு உத்தரவு
- IndiaGlitz, [Friday,May 08 2020]
ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த எல்ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தில் நேற்று திடீரென விஷவாயு கசிந்ததால் பொது மக்கள் கொத்துக்கொத்தாக திடீர் திடீரென சாலையில் மயக்கம் போட்டு விழுந்தார்கள். இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகி இருப்பதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்காக முதல் கட்டமாக ரூபாய் 50 கோடியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று எல்ஜி பாலிமர் நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விசாகப்பட்டினம் எல்ஜி பாலிமர் நிறுவன ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்தது குறித்து தேசிய பாதுகாப்பு மையம் தாமாகவே முன்னெடுத்து வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது எல்ஜி பாலிமர் நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனை அடுத்து விஷவாயு கசிவினால் ஏற்பட்ட பாதிப்புக்காக முதல்கட்டமாக ரூபாய் 50 கோடி எல்ஜி பாலிமர் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது