ஒரு குடிசை கோபுரம் ஆகிறது. ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளி மகன்
- IndiaGlitz, [Friday,June 02 2017]
ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின் வறுமையை முற்றிலும் போக்க கல்வி ஒன்றினால் மட்டுமே முடியும் என்பது பல உதாரணங்களில் இருந்து ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் தற்போது நெய்வேலியில் உள்ள குடிசை வீட்டில் வாழும் கூலித்தொழிலாளி ஒருவரின் மகன் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி வெளிவந்துள்ளது.
நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது தந்தை ஆறுமுகம் என்பவர் நெய்வேலி சுரங்கத்தில் பணிபுரிந்து உடல்நலக்குறைவால் பணியில் இருந்து விடுபட்டவர். அவருடைய மனைவி வள்ளி கூலி வேலை செய்து குடும்ப செலவையும் மகன் மணிகண்டனின் படிப்பு செலவையும் சமாளித்து வந்தார்.
விடுமுறை நாட்களில் அம்மாவுடன் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தால் தனது மேல்படிப்பை தொடர்ந்த மணிகண்டன் கோவையில் பி.பார்ம், பின்னர் சென்னையில் எம்.பார்ம் படிப்பை முடித்தார். பின்னர் தனது சிறுவயது கனவான ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வை 2016ஆம் ஆண்டு எழுதினார். அதில் வெற்றி பெற்று முதன்மை தேர்வை எழுதி அதிலும் 332வது ரேங்கில் வெற்றி பெற்றார். இரண்டு தேர்வையும் அவர் தமிழிலேயே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஆகஸ்ட் மாதம் முசோரிக்கு ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு செல்லவுள்ள மணிகண்டன், பயிற்சி முடிந்ததும் தமிழகத்திலேயே பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார். விரைவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரியவுள்ள மணிகண்டனின் வாழ்க்கை கோபுரம் அளவுக்கு உயரவுள்ளது. விடாமுயற்சி, உழைப்பு, கல்வி ஒருவரை குடிசையில் இருந்து கோபுரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு மணிகண்டனின் வாழ்க்கையை விட வேறு உதாரணம் வேண்டுமா?