அரிசி ரேஷன் கார்டுக்கு இன்னொரு ஜாக்பாட்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
- IndiaGlitz, [Thursday,May 13 2021]
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறி இருந்தார். அதையடுத்து மே 7 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணம் கொடுக்கும் ஆணையில் கையெழுத்து இட்டு அதில் முதற்கட்டமாக ரூ.2,000 இந்த மாதமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் கார்டுகளுக்கும் தற்போது டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து மே 15 ஆம் தேதி முதல் பணம் கொடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மட்டும் அல்லாது தமிழக அரசு மற்றொரு கொரோனா நிவாரணத் திட்டத்தையும் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அதிலும் தினக்கூலி, தெருவோரக் கடைக்காரர்களின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. இதனால் தமிழக அரசு கொரோனா நிவாரண அடிப்படையில் 10-15 சமையல் பொருட்கள் அடங்கிய கிட்டை ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்த பேச்சுவார்த்தையை தற்போது தமிழக அரசு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதோடு இத்திட்டத்தில் எத்தனை பொருட்கள், எவ்வளவு நாட்கள் கொடுப்பது என முடிவு செய்யப்படும் என்றும் இந்தத் திட்டத்திற்கான நிதி ஆதாரம் முடிவு செய்யப்பட்டவுடன் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் எனவும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை வழங்கல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் தினக்கூலிகள் பலரும் தற்போது உணவிற்காக அல்லாடி வருகின்றனர். இந்த நிலைமையில் தமிழக அரசின் இந்தத் திட்டம் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.