கணவரை கொலை செய்ய முயன்ற புதுமணப்பெண் தற்கொலை: கூலிப்படையினர் கைது!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கூலிப்படையினர் மூலம் கொலை செய்ய முயன்ற புதுமணப் பெண் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்தாலும் மணப்பெண் புவனேஸ்வரிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கட்டாய திருமணம் செய்ததால் கணவர் கௌதமன் உடன் வாழ விருப்பம் இல்லாமல் இருந்த புவனேஸ்வரி, கூலிப்படையின் மூலம் அவரை கொலை செய்ய ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. கூடலூர் தொட்டி பாலம் அருகே கௌதனை கூலிப்படையினர் கொலை செய்ய முயற்சி செய்தபோது அவர் படு காயங்களுடன் தப்பி விட்டார்.

கூலிப்படையினரை வைத்து அவரை கொலை செய்ய முயன்ற தகவல் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக புவனேஸ்வரி வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் கூலிப்படையை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் ஒருவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கொலை செய்ய முயன்ற புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.