முதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு
- IndiaGlitz, [Monday,August 02 2021]
முதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பி ஓடிய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனு என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமணமாகாததை அடுத்து அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உதால் ஹாத்திக் என்பவர் உறுதி அளித்துள்ளார். தனக்கு தெரிந்த பெண் இருப்பதாகவும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அவரை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து பேரம் பேசி 90 ஆயிரத்துக்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்
இந்த நிலையில் கோர்மி என்ற கிராமத்திற்கு சோனுவை அழைத்துச் சென்ற உதால், அங்கிருந்த அனிதா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தினார். அனிதாவை சோனுவுக்கு பிடித்துவிட்டதால் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்தில் அனிதாவின் உறவினர்கள் என்று கூறிக்கொண்ட ஜிதேந்திர ரத்னகுமார் மற்றும் அருண் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
சோனுவின் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்த நிலையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்து விட்டு அனைவரும் தூங்க சென்றனர். இந்த நிலையில் முதல் இரவு அன்று மொட்டை மாடிக்கு சென்று வருவதாக கூறிய அனிதா அங்கிருந்து எகிறி குதித்து தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனையடுத்து சோனுவின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அனிதா மற்றும் அவருடன் சென்ற இருவரை சந்தேகத்திற்கு இடமாக விசாரணை செய்ததில் அவர்கள் போலி திருமணம் செய்து ரூ.90,000 ஏமாற்றியது தெரியவந்தது
இதனை அடுத்து சோனு கொடுத்த புகாரின் அடிப்படையில் அனிதா உள்பட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நீண்ட வருடங்கள் திருமணம் ஆகாமல் இருந்த இளைஞரை ஏமாற்றிய இந்த கும்பலிடம் வேறு யாரேனும் ஏமாந்து இருக்கின்றார்களா? என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.