அடங்காத கொரோனாவால் பொதுத்தேர்தலை தள்ளிவைத்த அதிபர்!!!
- IndiaGlitz, [Tuesday,August 18 2020]
நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களுக்கு மேல் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் உலகளவில் நியூசிலாந்தை பற்றிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. புதிய நோய்த்தொற்று இல்லாத காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்நாட்டில் அனைத்து ஊரடங்கு விதிமுறைகளும் தளர்த்தப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஒட்டுமொத்த உலகத்திலும் ஸ்வீடன், நியூசிலாந்து, வியட்நாம், வடகொரியா போன்ற சில நாடுகள் மட்டும் கொரோனாவின் பெரும் பாதிப்புகளில் இருந்து தப்பி பிழைத்த நாடுகளாக நம்பப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த நாடுகளிலும் கொரோனா தலைத்தூக்க ஆரம்பித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தில் கடந்த 102 நாட்களுக்குப்பின் ஆக்லாந்து மாகாணத்தில் புதிய நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலை தள்ளிவைத்து அதிபர் ஜெசிந்தா ஆர்டர்ச்ன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தற்போது அக்டோபர் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனாவின் பிடியில் இருந்து உலகிலேயே முதன்முதலாக ஊரடங்கை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்ட நியூசிலாந்தில் இப்படி பொதுத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருப்பதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஆக்லாந்தில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆக்லாந்து பகுதியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.