உயிருக்குப் போராடும் நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெயின்ஸ்… ரசிகர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு காலத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட கிறிஸ் கெயின்ஸ் கடுமையான இதயக்கோளாறு காரணமாக ஆஸ்திரேலியாவின் கேன்பெரோரா நகரில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்சிஜன் உதவியோடு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் கொடிக்கட்டி பறந்த வீரர் கிறிஸ் கெயின்ஸ். இவரை பற்றி 20K ரசிகர்களுக்கு தெரிந்திருக்காவிட்டாலும் 90K ரசிகர்களுக்கு இவரைக் குறித்து நன்றாகவே தெரிந்திருக்கும். கடந்த 1989-2006 காலக்கட்டங்களில் நியூசிலாந்து அணிக்காக பரபரப்பாக விளையாடி வந்தார்.
62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய இவர் 200 விக்கெட்டுகள், 3,000 ரன்கள் எடுத்த உலகின் எட்டு ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்மீது கடந்த 2008 ஆம் ஆண்டு மேட்ச் பிட்சிங் புகார் கொடுக்கப்பட்டது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கிறிஸ் தன்மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிரூபித்தார்.
இதைத் தொடர்ந்து அணியில் இருந்து சக வீரர்களை மேட்ச் பிட்சிங் விவகாரத்துக்கு தூண்டினார் என இவர்மீது மீண்டும் புகார் எழுந்தது. இதற்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்திய கிறிஸ் ஒருகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கே கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதனால் வாகனங்களையும் அதையொட்டிய பணிமனைகளையும் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் தனது ஓய்விற்கு பிறகு லீக் போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். தற்போது 51 வயதாகும் கிறிஸ் கெயின்ஸ்க்கு உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கனவே பலமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.
தற்போது அவருக்கு Aortic dissection பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பல அறுவை சிகிச்சை செய்து தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டப் பின்பும் அவருடைய உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இதனால் சிட்னியில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட இருப்பதாகத் தகவல்கள் கூறப்படுகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெயின்ஸ் உடல்நிலை குறித்த தகவல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments