பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிரடி சலுகை: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Thursday,September 21 2017]
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சமீபத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. ரூ.309க்கு தினசரி 1GB டேட்டா மற்றும் எண்ணிலடங்கா இலவச அழைப்புகள் என சலுகைகளை அள்ளி வழங்கியதால் மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன
இந்த நிலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது புதிய சலுகையாக ரூ.249க்கும் ரீசார்ஜ் செய்யும் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1GB டேட்டாவும், இலவச அழைப்புகளையும் 28 நாட்களுக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் 25ஆம் தேதி வரை இருக்கும் என்றும் பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பி.எஸ்.என்.எல் ரூ.429க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு நாள்தோறும் 1GB டேட்டா மற்றும் எண்ணிலடங்கா அழைப்புகள் இலவசம் என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இந்த அதிரடி சலுகை அறிவிப்பால் இதேபோன்ற சலுகைகளை அளித்து வரும் ஜியோ, ஏர்டெல், வோடோபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.