புதுத் திருப்பம்: கொரோனா வைரஸில் தனது நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட சீனா!!!
- IndiaGlitz, [Monday,June 08 2020]
உலக நாடுகளை மூன்றாம் உலகப் போருக்கு தள்ளும் அளவிற்கு கொரோனா வைரஸ் பரவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சீனா ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து முறையான தகவலை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த வில்லை எனவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது எனவும் பல உலக நாடுகள் சீனா மீது குற்றம் சுமத்தி வருகின்றன. வுஹான் மாகாணத்தில் ஆய்வகத்தில் இருந்தே இந்த வைரஸ் கசிந்தது, சீனா வேண்டுமென்றே இந்த வைரஸை உலக நாடுகளுக்கு பரப்பியது எனவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி இருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாகச் உலகச் சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்த கருத்து விவாதத்தில் அமெரிக்கா உலகச் சுகாதார அமைப்பில் இருந்து விலகி விட்டதாகவும் அதிபர் செய்தி வெளியிட்டு இருக்கிறார். மேலும் இதுவரை அந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த நிதி உலக நாடுகளில் செயல்படும் மற்ற சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்காவோடு 120 நாடுகள் கொரோனா பரவல் குறித்து முழுமையான விசாரணை தேவை என்ற கோரிக்கையையும் WHO விடம் வைத்தன. இந்த விசாரணை முழுமையாக நடத்தப்படும் எனவும் உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் சீனா அதிபரும் கொரோனா பரவல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகச் சுகாதார பொதுக்குழுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். சீனா அதிபரே முன்வந்து விசாரணை வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் பிரச்சனை முடிந்தது என்று உலகம் முழுவதும் கருதப்பட்டது. இந்நிலையில் சீன அரசாங்கம் கொரோனா உயிர்ப்பலியை அதிகரித்து கணக்கு வெளியிட்டது. இந்த விவகாரம் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியது. சீனாவின் வுஹான் மாகாண அதிகாரிகள் கொரோனா பரவலின் ஆரம்பத்தில் பலர் வீடுகளிலேயே இறந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது புதுப்பிக்கப் பட்டு இருக்கிறது என விளக்கம் அளித்தது. ஆனால் இந்த எண்ணிக்கை குறித்து மீண்டும் அமெரிக்க அதிபர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.
இப்படி உலக நாடுகளே தலையைப் பிய்த்துக் கொள்ளும் விவகாரத்திற்கு தற்போது சீனா விளக்கம் அளித்து இருக்கிறது. சீனாவின் தகவல் தொடர்புத்துறை தலைவர் சூலின், சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி சிலர் சளி, காய்ச்சல் அறிகுறிகளோடு அனுமதிக்கப் பட்டார்கள். அப்படி அனுமதிக்கப் பட்டவர்களின் அறிகுறி சாதாரண காய்ச்சலை விட சற்று வித்தியாசமாக இருந்தது. எனவே நிபுணர்களை அழைத்து அது குறித்த ஆய்வில் ஈடுபடுத்தப் பட்டது. புதிய சளி, காய்ச்சலை ஆய்வுக்குட்படுத்திய நிபுணர்கள் நிமோனியா என்ற முடிவினைத் தந்தனர். ஆனால் மிக விரைவிலேயே சளி, காய்ச்சலால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எனவே இந்த விவகாரத்தில் அதிக ஆய்வு தேவை என்பதை நிபுணர்கள் உணர்ந்தனர். அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த புதிய காய்ச்சல் தொற்று, வுஹான் மாகாணத்தில் உள்ள ஈரமான சந்தைகளில் இருந்து வருகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இது வௌவால்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் எனவும் இது நேரடியாக மனிதர்களுக்கு நோய்த்தொற்றை பரப்ப வில்லை என்றும் விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பினர். ஆனால் இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றே விஞ்ஞானிகள் மத்தியில் பேசப்படுகிறது.
வௌவால்களிடம் இருந்து எறும்புத் திண்ணிகளிடம் இந்த வைரஸ் பரவியிருக்கலாம். எறும்புத் திண்ணி நேரடியாகவோ அல்லது மனிதர்களிடம் பரவியோ பாதிப்பை ஏற்படுத்தும் நோய்த்தொற்றாக மாறியிருக்கலாம் என்ற முடிவையும் விஞ்ஞானிகள் வைத்தனர். ஆனால் போதுமான ஆதாரங்கள் அன்றைக்கு இல்லாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்பு ஜனவரி 14 ஆம் தேதி இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மைக் கொண்டது என்பதையும் சீனாவின் முன்னணி நோய் நிபுணரான ஜாங் நன்வினர் கண்டுபிடித்தார். இந்த முடிவு ஜனவரி 20 ஆம் தேதி குவாங் டன் மாகாணத்தில் இருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு முறையாக உலகச் சுகாதார அமைப்பிற்கும் அமெரிக்காவிற்கும் தெரியப் படுத்தப்பட்டது.
சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டு அதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில் இருந்தே அதாவது ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்தே முறையான தகவல்களை உலகச் சுகாதார அமைப்பிற்கு சீனா தெரியப்படுத்தி வருகிறது. அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளுக்கும் இந்த செய்திகள் முறையாக தெரிவிக்கப்பட்டன என்றும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் சீனா கொரோனா வைரஸ் பற்றிய தகவலை தெரியப் படுத்துவதற்கு முன்பே தைவான் உலகச் சுகாதார அமைப்பை எச்சரித்தது. தைவானே உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய தகவலை முதன் முதலில் வெளிப்படுத்தியது எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த விவாரகத்தால் சீனாவின் மீது உலக நாடுகள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவை எதிர்க்கும் அனைத்து நாடுகளும் தற்போது தைவானுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்து இருக்கின்றன.