இனி பயணம் செய்து கொண்டே புதுப்படம் பார்க்கலாம்: வெறும் ரூ.30 தான்!
- IndiaGlitz, [Tuesday,July 12 2022]
திரையரங்குகளில் சென்று மட்டுமே படம் பார்க்க முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்துகொண்டே ஓடிடி மூலம் புதிய திரைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் பயணம் செய்துகொண்டே மொபைலில் படம் பார்க்கும் புதிய தொழில்நுட்பம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓடிடி தொழில்நுட்பம் போலவே தற்போது எம்டிஎம் என்ற தொழில்நுட்பம் வந்துள்ளது. மூவி டு மொபைல் என்று கூறப்படும் இந்த தொழில்நுட்பம் மூலம் எம்டிஎம் செயலியை மொபைலில் டவுன்லோடு செய்து அதன் மூலம் படம் பார்க்கலாம்.
சமீபத்தில் வெளியான யாஷிகா நடித்த ’பெஸ்டி’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் எம்டிஎம் மொபைல் செயலியில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செயலியில் ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு 30 ரூபாய் மட்டும் கட்டணமாக கட்டினால் போதும் என்பதும் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டோ அல்லது பயணம் செய்துகொண்டு இருக்கும்போது மொபைல் போனில் படம் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்டிஎம் என்ற மூவி டு மொபைல் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்க தலைவர் என். ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சௌந்தரபாண்டியன், என்.விஜயமுரளி, விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் இமான் அண்ணாச்சி, இதன் தமிழ்நாடு பாண்டிச்சேரி விநியோகஸ்தர் கோவிந்தராஜ், சின்னத்திரை இயக்குனர் சங்க தலைவர் தளபதி, இயக்குனரும் நடிகருமான சி.ரங்கநாதன், தயாரிப்பாளர் தங்கம் சேகர், எம்டிஎம் இயக்குனர்கள் விஜயசேகரன், தயானந்தன், உட்பட ஏராளமான தயாரிப்பாளர்களும் திரையுலகை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தினர். ஒவ்வொரு மாதமும் இரண்டு திரைப்படங்கள் எம்டிஎம் செயலியில் வெளியாகும் என கூறப்படுகிறது.