கொரேனா சிகிச்சைக்கு புது டெக்னிக்: எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை!!!

  • IndiaGlitz, [Friday,June 19 2020]

 

கொரோனாவிற்குத் தடுப்பு மருந்து மட்டுமல்ல சிகிச்சையும் சிக்கல் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு இதுவரை உறுதியான மருந்து எதுவும் பரிந்துரைக்கப் படாத நிலையில் தற்போது ரஷ்யா, பிரிட்டன் போன்ற சில நாடுகள் மட்டும் புதிய மருந்துகளை அங்கீகரித்து இருக்கின்றன. இந்நிலையில் நம்முடைய எய்ம்ஸ் மருத்துவர்கள் கொரோனா சிகிச்சைக்கு ஒரு புது டெக்னிக்கை பயன்படுத்தி நல்ல பலனை அடைந்து இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் “ரேடியேஷன் ஆன்காலஜி” கதிர்வீச்சு மையத்தான் தற்போது கொரோனா சிகிச்சைக்கு புதிய டெக்னிக்கை பயன்படுத்தி இருக்கிறது. புற்றுநோயாளிகளுக்கு கதிர் வீச்சை செலுத்தி குணப்படுத்தும் முறையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மருத்துவமனை சிகிச்சை அளித்து சோதனையில் ஈடுபட்டு இருக்கிறது. முதற்கட்டமாக 50  வயதில் இருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு கதிர் வீச்சின் மூலம் சிகிச்சை அளித்து அதில் வெற்றியும் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய சிகிச்சை முறை குறித்து பேசிய டாக்டர் டி.என் ஷர்மா, இந்த முறையில் சிகிச்சை அளிக்கும்போது வெறுமனே 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். பக்க விளைவுகள் எதுவும் இல்லை எனவும் தெளிவு படுத்தி இருக்கிறார்.

முதற்கட்டமாக 13 கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராகி வருவதாகவும் தலைமை இயக்குநர் தெரிவித்து உள்ளார். இதையடுத்து மேலும் 8 நோயாளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. 1940 ஆம் ஆண்டு வரை நிமோனியா நோய்க்கான நோய் எதிர்ப்பு புரதங்கள் கண்டுபிடிக்கப் படாமல் இருந்த நேரத்தில் கதிர்வீச்சு சிகிச்சை முறை நல்ல பலனை அளித்ததாகவும் கூறப்படுகிறது. அதைப் போலவே தற்போது கொரோனா சிகிச்சைக்கும் கதிர்வீச்சு சிகிச்சை நல்ல பலனைக் கொடுக்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு அதிகளவு கதிர்வீச்சு கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு இதுபோன்ற அதிகளவு கதிர்வீச்சு செலுத்தப் பட வேண்டியதில்லை என்றும், குறைவான நேரமே தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.  சோதனை முயற்சிகளில் கதிர்வீச்சு சிகிச்சை முறை வெற்றி பெறும்போது மேலும் இந்த ஆய்வு விரிவுபடுத்தப் படும் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.