புதிய காட்சிகள் இணைப்பு: வடசென்னை குழுவினர் தகவல்
- IndiaGlitz, [Friday,October 26 2018]
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆயுதபூஜை திருநாளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தில் மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளை படத்தில் இருந்து நீக்கவேண்டும் என எழுந்த கோரிக்கையை ஏற்று கொண்ட வெற்றிமாறன் ஒருசில நாட்களில் அந்த காட்சிகள் நீக்கப்படும் என தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த காட்சிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 'வடசென்னை' படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான 'வடசென்னை' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டுள்ளது'
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.