உலகம் முழுவதும் இறைச்சி சந்தைகளுக்கு புதிய விதிமுறைகள்!!! WHO வலியுறுத்தல்!!!

  • IndiaGlitz, [Thursday,April 23 2020]

 

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலக நாடுகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக உலகம் முழுவதிலும் உள்ள இறைச்சி சந்தைகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதன்படி இறைச்சி சந்தைகளில் வனவிலங்குகள் விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்யவும் வனவிலங்குகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறும் WHO வின் இயக்குநர் டெட்ரோஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இறைச்சி சந்தைகளில் சுகாதாரமான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து உலக நாடுகளையும் WHO கேட்டுக்கொண்டுள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா என உலகில் பல நாடுகளில் இறைச்சிச் சந்தைகள் பரவலான முறையில் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான நாடுகளின் இறைச்சி சந்தைகள் நெருக்கமான சூழலில் அமைந்திருக்கிறது. அதோடு தடை செய்யப்பட்ட வன விலங்குகளும் விற்கப்படுகின்றன. சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள மீன் சந்தையில் தடை செய்யப்பட்ட வௌவால், முதலை, எறும்புத்திண்ணி போன்ற விலங்குகள் விற்கப்பட்டன எனச் செய்திகள் வெளியாகின. அங்கு விற்கப்பட்ட வௌவால்களின் இருந்தே கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக ஆய்வுகளும் வெளியாகியுள்ளது.

இதுவரை மனிதர்களைப் பாதித்துள்ள வைரஸ்களில் 70% விலங்குகளில் இருந்தே தோன்றியிருக்கின்றன. எனவே இறைச்சி சந்தைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என உலக நாடுகளின் அரசுகளை WHO கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா. சபையுடன் இணைந்து WHO விதிமுறைகளை வகுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகளுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு உலக நாடுகள் முழுமையாக தடை விதிக்க வேண்டும் எனவும் WHO வலியுறுத்தியுள்ளது.

மேலும், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ்களைக் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.