இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மூலிகை தாவரம்…

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

 

எக்கினாப்ஸ் எனும் வகையைச் சார்ந்த 2 புதிய மூலிகை வகை செடியை விஞ்ஞானிகள் வடக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் புதிதாகக் கண்டுபிடித்து உள்ளனர். இதுவரை உலக மக்களின் பார்வையில் இருந்து ஒளிந்து கொண்டிருந்த இந்த செடியை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததோடு அதுகுறித்த தகவலையும் Nordic journal of Botany எனும் இதழில் வெளியிட்டு உள்ளனர்.

இத்தாலியின் கேமரினா பல்கலைக் கழகம் மற்றும் மும்பையைச் சார்ந்த நேச்சர் ஹிஸ்டரி ஆப் சயின்ஸ் இரண்டும் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் சஹ்யாத்ரி மலைப் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது இந்த புதிய வகை செடிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. திறந்தவெளி தாவரமான இந்த மூலிகைச் செடிகள் வட்டவடிவில் பூ பூக்கக்கூடியது. 9 செ.மீ வரை வளரும் தன்மைக் கொண்ட இத்தாவரம் ஜுன்-செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பூக்கக்கூடியதாகவும் அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் பழம் பழுக்கும் தன்மைக் கொண்டது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இத்தாவரத்திற்கு குளோபல் சஹியாத்ரி திஸ்டில் மற்றும் பெரிய குளோபல் ஸ்பைனி திஸ்டில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வடக்கு மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள 800-1400 அடி உயர மலைகளில் இந்த வகைத் தாவரங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் நாசிக் பகுதிகளில் இத்தாவரம் அதிகமாகக் காணப்படுகிறது.

மேலும் இத்தாவரம் தடித்த தண்டுகளைக் கொண்டு நிமிர்ந்து வளரும் தன்மையைக் கொண்டிருக்கிறது. உலகத்தில் காணப்படும் மற்ற எக்கினாப் மூலிகை செடிகளை ஒப்பிடும்போது இது பெரியதாகவும் அதன் மகரந்தத் தன்மையுடனும் இருக்கிறது. உலகம் முழுவதும் 130 எக்கினாப் செடிகள் காணப்பட்டாலும் அவற்றில் தற்போது 5 வகைகள் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றில் 3 வகை வெளிநாடுகளிலும் தற்போது 2 வகை மகாராஷ்டிரா பகுதிகளிலும் கிடைக்கிறது.

எக்கினாப் தாவரங்கள் பெரும்பாலும் இமயமலை அடிவாரம் மற்றும் இந்தியத் துணைக்கண்ட பகுதிகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் பகுதிகளில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நமது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலும் புதிய வகை எக்கினாப் கண்டறியப்பட்டு இருப்பது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். எக்கினாப் என்பது புற்றுநோய் மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்ற மூலிகைச் செடியாகக் கருதப்படும் நிலையில் தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள மூலிகைச் செடியின் தன்மையைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.