திரையரங்குகள் திறந்தாலும் புதுப்படங்கள் வெளிவராது: பாரதிராஜா அறிவிப்பால் பரபரப்பு!
- IndiaGlitz, [Monday,November 02 2020]
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் பத்தாம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கைகள், பார்வையாளர்களுக்கு முகக்கவசம், ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் கிருமிநாசினி கொண்டு திரையரங்கை சுத்தப்படுத்துவது உள்பட ஒரு சில நிபந்தனைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
7 மாதங்களுக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படுவதால் இதுவரை வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் விபிஎப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா இது குறித்து மேலும் கூறியபோது ’விபிஎப் கட்டணங்களை திரையரங்க உரிமையாளர்களே செலுத்த வேண்டுமென்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணத்தை மட்டுமே தயாரிப்பாளர்கள் செலுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
விபிஎப் கட்டணத்தை திரை அரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று பாரதிராஜா உறுதிபட கூறியிருப்பதால் வரும் பத்தாம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மீண்டும் பழைய படங்கள் தான் திரையிடப்படும் என்பதால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது