வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்: சென்னைக்கு மழை என வெதர்மேன் தகவல்

சமீபத்தில் அரபிக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறி கேரளா, குஜராத் உள்பட ஒருசில மாநிலங்களில் புரட்டி எடுத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தம் தோன்றி உள்ளதாகவும் இந்த காற்றழுத்தம் மே 23-இல் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மே மாதம் 19 ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை சென்னையில் மழை பெய்யும் என்று வெதர்மேன் கூறியுள்ளார். டவ்தேவ் புயலின் தாக்கம் மற்றும் மேற்கு காற்றழுத்தம் வலுவிழந்ததால் இந்த புதிய காற்றழுத்தம் உருவாகி இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

சென்னையில் தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்வது நல்லது என்றாலும் புயலாக மாறி சென்னைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் சென்னை மக்கள் திண்டாடி வரும் நிலையில் மீண்டும் ஒரு புயலை சந்திக்கும் நிலையில் இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை.