ஐபிஎல் தொடரில் புதிய 2 அணிகள்… Owners யார் தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,October 26 2021] Sports News
2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இடம்பெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்து இருந்த நிலையில் இதற்கான ஏலம் நேற்று துபாயில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி குரூப் ஏலத்தில் எடுத்துள்ளது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் ஏலத்தில் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல் அணிகள் என 8 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இயங்கி, பின்னர் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் புதிதாக இணைக்கப்பட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விளையாடியது. இதில் புனே வாரியர்ஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கொச்சி டஸ்கர்ஸ் அணி நிதிநிலை காரணமாக விலகிக் கொண்டது.
தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் லக்னோ அணியை அதானி குழுமத்தைச் சேர்ந்த ஆர்.சி.சஞ்சீவ் கோயங்கோ ரூ.7,200 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் ரூ.5,200 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் 2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறும். எனவே ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத் தொகையும் அதிகரித்து பிசிசிஐயின் சொத்து மதிப்பு உயரும் எனச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒளிபரப்பு உரிமத் தொகை கிட்டத்தட்ட 28 ஆயிரம் கோடியில் இருந்து 36 ஆயிரம் கோடிவரை அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.