தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு தளர்வுகள்.. எவையெல்லாம் இயங்கும்?

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் ஜுலை 5 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறைகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் கொரோனா பரவல் தன்மையை அடிப்படையாக வைத்து மாவட்டங்கள் அனைத்தும் 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வகை (1)- கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

வகை (2)- அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்

வகை (3)- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

ஜுலை 5 வரையுள்ள விதிமுறைகள்

வகை 3இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் வகை 3 இல் இருக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களில் வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கோயில்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு வெளியே தனிமனித இடைவெளியுடன் காத்திருப்பு இடங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலில் இருக்கும் சிலைகளை பக்தர்கள் தொடுவதற்கோ, விபூதி, குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும். அர்ச்சனைக்காக பூ, பழம், தேங்காய் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. 

வகை 2 மற்றும் 3 ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த 27 மாவட்டங்களிலும் 47 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து சேவை துவங்கியுள்ளது.

இந்த 27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை. இந்த மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10- மாலை 5 மணி வரை திறந்து இருக்கும்.

வகை 2 மற்றும் 3 ஆகிய 27 மாவட்டங்களில் துணிக்கடை மற்றும் நகைக்கடைகள் இயங்கலாம்

வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6-இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9- இரவு 7 மணி வரை செயல்படலாம். அனைத்துத் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களில் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்.

அரசு பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் காலை 6 முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சிக்காக மட்டும் திறக்கப்படும். மேலும் மின்பொருட்கள், கல்வி புத்தகங்கள், பாத்திரக்கடைகள், பேன்ஸி, செல்போன் கடைகள் உள்ளிட்டவை காலை 9- இரவு 7 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் பொதுஇடங்களில் தனிமனித இடைவெளியுடன் நடந்து கொள்ளவும் மாஸ்க் போன்ற பாதுகாப்பு கவசங்களை தவறாமல் கடைப்பிடிக்கவும் தமிழக அரசு அறிவுறித்தி உள்ளது.