கர்நாடகாவில் வெற்றி, இனி காவிரி பிரச்சனை இல்லை; தமிழிசை செளந்திரராஜன்

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

தமிழகம், கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் காவிரி பிரச்சனை இனி முடிவுக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக யாருடைய உதவியும் இன்றி தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் தற்போது அக்கட்சி 120க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.

எனவே விரைவில் எடியூரப்பா தலைமையிலான புதிய ஆட்சி கர்நாடகத்தில் பதவியேற்க உள்ளது. கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என ஏற்கனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர் கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்று பேட்டியளித்த தமிழிசை, 'கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும். எடியூரப்பா தலைமையிலான அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் காவிரி பிரச்சனை இனி இரண்டு மாநிலத்திற்கும் இடையில் இருக்காது' என்று கூறினார்.

மேலும் ராகுல்காந்தியின் பிரித்தாளும் பரப்புரை எடுபடவில்லை என்றும், இதனால் ஆட்சி செய்து கொண்டிருந்த மாநிலத்தையே அவர்கள் இழந்துவிட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மத்தியிலும் கர்நாடகத்திலும் பாஜக ஆட்சியும், தமிழகத்தில் பாஜக ஆதரவு ஆட்சியும் இருப்பதால் காவிரி பிரச்சனை முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.