ஆம்பூர் காவலர்கள் உற்சாகமாக வேலை செய்ய புதிய முயற்சி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோடை வெயிலை தாக்குபிடிக்க முடியாத காரணத்தால், போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சி உணவுப்பொருட்களை வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொடுமையாக உள்ளது. மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தாலும், அவர்களின் நன்மைக்காக பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்களின் நிலை படுமோசமாக உள்ளது.
கொரோனா மற்றும் வெயிலின் தாக்கம் இரண்டாலும் போக்குவரத்து காவலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலை வேலையில் சுறுசுறுப்புடன் இயல்பாக பணியில் இருக்கும் காவலர்கள், வெயிலினால் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் காவலர்கள், வயது முதிர்ந்த காவலர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த காரணங்களால் வெயிலை தணிக்கவும், காவலர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். போக்குவரத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தினமும் 3 வேளையும் மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி மற்றும் வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆம்பூர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் லட்சுமணன், ஆம்பூர் புறவழிச் சாலை அருகே உள்ள காவலர்களுக்கு மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார். இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போக்குவரத்துப் பணியில் உள்ள காவலர்கள், சுங்கச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு குளிர்ச்சி உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் சார்பாக கூறப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments