ஐபிஎல் டி20 போட்டிக்களில் நேரத்தை மாற்றி புது அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Monday,August 03 2020] Sports News
ஐபிஎல் டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஐபிஎல் டி20 போட்டிகள் எப்போதும் ஞாயிற்றுகிழமை அன்று முடிக்கப்படும். ஆனால் இந்தத் தடவை நவம்பர் 10 செவ்வாய்கிழமை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. முன்னர் நடைபெற்ற போட்டிகளைவிட செப்டம்பர் 19 முதல் நம்பவர் 10 என 53 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதனால் முன்னர் நடைபெற்ற போட்டிகளைவிட 3 நாட்கள் சேர்த்து தற்போதைய 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆட்டங்களில் 10 போட்டிகள் இரு ஆட்டங்களில் நடக்கும் முறையில் அமையவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் மாலை 4 மணிக்கு போட்டித் தொடங்கி இரவு 8 மணிக்கு முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் அரை மணி நேரம் முன்னதாகவே அதாவது மாலை 3.30 மணிக்கு போட்டித் தொடங்கி இரவு 7.30 மணிக்கு முடிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்காக 8 அணிகள் இடம்பெற இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் 24 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஆட்களை மாற்றிக்கொள்வதில் எந்த விதிமுறையையும் பின்பற்ற தேவையில்லை. எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இந்தப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டிஸ் இன் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட விருக்கிறது. புது அறிவிப்புகள் அடங்கிய அறிக்கை தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டு இருக்கிறது எனவும் மத்திய அரசு ஐபிஎல் டி20 போட்டிகளுக்கு இன்னும் எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. காரணம் ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான பிரதான ஸ்பான்ஸராக ViVo நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிறுவனம் சீனாவுக்கு சொந்தமானது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைத் தொடர்பான பிரச்சனைகளில் இதுவரை முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் பல சீனத் தயாரிப்புகளுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான அறிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பல ஆயிரம் கோடி வருமானம் தரக்கூடிய ஐபிஎல் போட்டிகளை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் போராடி வரும் நிலையில் தற்போது போட்டிக்கான இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. முன்னதாக இந்தியாவில் ரசிகர்கள் யாரும் இல்லாமலே போட்டிகளை நடத்திவிடலாம் என நினைத்த ஐபிஎல் நிர்வாகத்துக்கு பெருத்த ஏமாற்றம் கிடைத்த நிலையில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடத்த வாய்ப்புகள் கிடைத்தன. அதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதால் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை போட்டிகளை நிரந்தரமாக தள்ளிவைப்பது குறித்து ஐசிசி அறிவிப்பு வெளியட்டவுடன் ஐபிஎல் போட்டிகளில் பெருத்த மாற்றங்கள் இல்லாமல் தற்போது இறுதி நிலையை எட்டியிருக்கிறது. உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில் ஐபிஎல் டி20 போட்டிகளைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.