அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழகத்திற்கு பாதிப்பா?

அந்தமானில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுபகுதி வலுப்பெற்று கரையை கடந்து இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் கனமழை முதல் அதிகனமழை வரை கொட்டி தீர்த்து இருக்கிறது. இந்நிலையில் அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) – நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை- நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை- திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

திங்கட்கிழமை – உள்மாவடடங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.