'வாழை' படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்.. விபத்து நடந்த அன்று நடந்தது என்ன?
- IndiaGlitz, [Thursday,September 05 2024]
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த விபத்து ஒன்றின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விபத்தில் உள்ள சில முக்கியமான தகவல்களை மாரி செல்வராஜ் மறைத்து விட்டார் என்று சமூக வலைதளங்களில் இந்த விபத்து குறித்து முழுமையாக அறிந்த சிலர் பதிவு செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக ஒரு பதிவு அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகர் பாரூக் என்பவரின் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
பேட்மா நகரத்தில் இரவு தொழுகையை முடித்துவிட்டு மறைந்த, ஆபுதீன் சைக்கிள் கடையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அந்த லாரி ஓட்டுநர் வேகமாக வந்து லாரியின் உரிமையாளருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு ஓடிவிட்டார். பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் கூட்டமாக டார்ச் லைட், பெட்ரோமக்ஸ் வரைக்கும் கொண்டு சென்று கடுமையான போராட்டத்துக்குப் பின் சிலரின் உயிரைக் காப்பாற்றி அனுப்பியதுதான் வரலாறு. ஆட்சியர், உயர் அதிகாரிகள் என பலர், உதவிபுரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய மக்களின் இந்த சேவையை வாழ்த்திவிட்டு சென்றனர். ஆனால் மாரி செல்வராஜ், இஸ்லாமியர்கள் மற்றும் அந்த நேரத்தில் உதவிக்கு வந்த முத்துசாமிபுரம் பேரூர், தேவர் இன மக்களின் உதவியையும் உழைப்பையும் உதாசீனப்படுத்திவிட்டு, கதையில் இதைப் பற்றி காட்டாமல் வரலாறு வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று மிக கவனமாக கதைக்களத்தை அமைத்து படத்தை எடுத்து இருக்கிறார்.
உண்மைச் சம்பவமென்றால் உண்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும். ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்துக்காக படத்தை எடுத்துவிட்டு, விளம்பரத்துக்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குநர் என்று எப்படி கூற முடியும்? என்று பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரை உலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் இந்த படத்தை பாராட்டிய நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு மாரி செல்வராஜ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.