தற்கொலையை படுகொலை என்று கூறிய ரஞ்சித்: கொந்தளித்த நெட்டிசன்கள்
- IndiaGlitz, [Thursday,June 06 2019]
நேற்று நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை எழுதிய சுமார் 50ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஸ்ருதி என்ற மாணவி தமிழகத்திலேயே முதலிடமும் இந்திய அளவில் 10வது இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த ரிதுஸ்ரீ மற்றும் வைசியா ஆகிய இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகளை இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் 'படுகொலைகள்' என்று குறிப்பிட்டு இந்த படுகொலையை நிகழ்த்தியது மத்திய, மாநில அரசுகளும், அதனை தட்டிக்கேட்க முடியாத நாமும்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய டுவிட் இதுதான்: நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது ரிதுஶ்ரீ, வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு. நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள்தான் இதை நிகழ்த்தியவர்கள்! என குறிப்பிட்டுள்ளார்.
பா.ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இரண்டு மாணவிகளின் தற்கொலை உண்மையில் துரதிஷ்டமானதுதான். ஆனால் அவர்கள் எடுத்த தவறான முடிவை நியாயப்படுத்தும் வகையில் ரஞ்சித்தின் கருத்து உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்கொலைத்தான் தீர்வு என்று எண்ணினால் எந்த பரிட்சையும் வைக்க முடியாது என்றும், நீட் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்களுக்கும் மேல் பாஸ் செய்துள்ளார்கள் என்றும், பாஸ் செய்யாதவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும் என்றும் ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
மேலும் 'எளியவர்களுக்கு கல்வி மறுப்பு' என்ற வாதமும் தவறானது என்றும், ஓட்டலில் காவலாளி பணி செய்யும் ஒருவரின் மகளான கவுசல்யா என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் கல்விக்கு முயற்சி மட்டுமே தேவை என்றும் எளியவர்கள், பணக்காரர்கள் என்ற பேதமில்லை என்றும் ஒரு நெட்டிசன் பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும்போது பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என்பதால் அந்த தேர்வுகளையே ரத்து செய்ய முடியுமா? என்றும், மாணவர்களை நல்வழிப்படுத்தாமல் இருந்தால் கூட பரவாயில்லை, தவறான பாதையை காட்ட வேண்டாம் என்றும் ரஞ்சித்துக்கு பல நெட்டிசன்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!
— pa.ranjith (@beemji) June 6, 2019