ப.சிதம்பரத்தின் டீ-காபி டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி

  • IndiaGlitz, [Sunday,March 25 2018]

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சற்றுமுன்னர் தனது டுவிட்டரில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள 'காபிடே' கடையில் ஒரு டீயின் விலை ரூ.135 என்றும் காபியின் விலை ரூ.180 என்றும் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 'டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் என்றும் நான் செய்தது சரியா? தவறா? என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரத்தின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். முதன்முதலாக காசு கொடுத்து சாப்பிடுவதால் விலையை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்ததாக ஒரு நெட்டிசனும், சென்னை பரவாயில்லை, டில்லி விமான நிலையத்துல ஒரு காபியின் விலை ரூ.350 என்று ஒரு நெட்டிசனும், காபி கொட்டைக்கு வரி போட்டது நீங்க நிதி அமைச்சராக இருந்த போதுதானே என்று இன்னொரு நெட்டிசனும் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு டுவிட்டர் பயனாளி கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் கர்நாடக மாநில முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களது மகன் தான் 'காபி டே' கடைகளின் ஓனர். காங்கிரஸ் பிரமுகரின் மகன் நடத்தும் கடையின் விலை குறித்து இன்னொரு காங்கிரஸ் பிரமுகர் புகார் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக கூறியுள்ளார். எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.