360 கோடி ரூபாய் கப்பல் வாங்கிய அமேசான் நிறுவனர்… இதற்காகப் பாலத்தையே இடிக்கும் அரசு!

  • IndiaGlitz, [Tuesday,February 08 2022]

அமேசான் நிறுவனத்தின் செயல்தலைவர் ஜெஃப் பெசோஸ் சமீபகாலமாக வெவ்வேறு தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் விண்வெளிக்கு தனது விஞ்ஞானிகளுடன் சுற்றுலா சென்றது உலக வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜெஃப் பெசோஸ் 430 மில்லியன் டாலரில் 40 மீ உயரம் கொண்ட ஒரு பிரம்மாண்ட கப்பலை வாங்கியுள்ளதாகவும் அந்தக் கப்பல் நெதர்லாந்து நாட்டிலுள்ள ஒரு பழமையான வரலாற்றுப் பாலத்தில் பயணம் செய்ய முடியாமல் நிற்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வரலாற்று பாலத்தில் ஒரு பகுதியை உடைத்து இந்தக் கப்பல் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தித் தர அந்நாட்டின் ரோட்டர்டேம் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆனால் ஒரு கப்பலுக்காக வரலாற்று பாலத்தை இடிப்பதா எனப் பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 1879 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோனின்ஷிங் எனப்படும் இந்தப் பாலமானது கடந்த 1940 களில் இரண்டாம் உலகப்போரின்போது நாசி ஜெர்மனி படைகளால் குண்டு வைத்துத் தகர்த்தப்பட்டது. பின்னர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப் பாலம் மீண்டும் அரசாங்கத்தால் சரிசெய்யப் பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜெஃப் பெசோஸ் வாங்கிய கப்பலுக்காக இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு மீண்டும் சரிசெய்து கொடுக்கப்படும் என்றும் அதற்கான செலவை அமேசான் நிறுவனம் பொறுப்பேற்கும் எனவும் கூறப்படுகிறது.